(ப. இ.) எங்கும் நிறைந்துள்ள சிவபெருமானை ஆருயிர்களின் உள்ளத்துமுளன் புறத்துமுளன் என்று அன்புடன் சிவயநம என்னும் செந்தமிழ்மறை ஓதி வழிபடுவார்க்கு எம்மிறையாகிற அச்சிவபெருமான் வெளிப்பட்டு நன்மை அருள்வன். உள்ளத்தும் இல்லை; புறத்தும் இல்லை என்று கூறுபவர்க்கு உள்ளத்தும் புறத்தும் வெளிப்படாது மறைந்து நின்று நன்மையருள்வானல்லன். இல்லை என்பதன் பொருள் சிவபெருமானால் எய்தும் நன்மை இல்லை என்பதாம். இதற்கு ஒப்பு திருக்குறளில் என்ன இருக்கின்றது? அதில் ஒன்றுமில்லை என்பார்க்கு அத் திருக்குறளினால் எய்தும் நன்மை ஏதும் இல்லை என்பதாம். (4) 1507. முதலொன்றா மானை முதுகுடன் வாலுந் திதமுறு கொம்பு செவிதுதிக் கைகான் மதியுடன் அந்தகர் வகைவகை பார்த்தே அதுகூற லொக்கும் ஆறு சமயமே.1 (ப. இ.) உறுப்பும் உறுப்பியுமாகிய யானை முதல் ஒன்றாகும். அவ் யானையின் மலைபோன்ற முதுகையும், துடைப்பம் போலும் வாலையும், தண்டுபோலும் உறுதியான கொம்பையும், முறம்போலும் செவியினையும், உலக்கைபோலும் துதிக்கையினையும், உரல்போலும் காலினையும் கண்ணிலார் பலர் தனித்தனி ஒவ்வோர் உறுப்பினை மட்டுந் தடவி யானை என்பது முறையே மலை எனவும், துடைப்பம் எனவும், தண்டெனவும், முறம் எனவும், உலக்கை எனவும், உரல் எனவும் கூறித் தம்முள் மாறுபட்டுச் சண்டையிட்டனர். அச் சண்டையினை ஒத்ததே ஆறு சமயத்தாரும் தத்தம் சமயமே உயர்ந்ததெனக் கூறி முரண்படுதல். கண்ணுள்ளான் ஒருவன் இவையனைத்தும் யானை அல்ல, இவையனைத்தும் யானையின் ஒவ்வோர் உறுப்பாகும். இவை யனைத்தும் சேர்ந்த உறுப்பியே யானையாம் என்று கூறியமைதிப்படுத்தினன். ஈண்டுக் கண்ணுள்ளான் திரு அருட்கண்ணுடைய சித்தாந்தச் சைவன். (5) 1508. ஆறு சமயமுங் கண்டவர் கண்டிலர் ஆறு சமயப் பொருளும் அவனலன் தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின் மாறுதல் இன்றி மனைபுக லாமே.2 (ப. இ.) முக்கூற்றுப் புறச்சமயத்துள் குறிப்பாக ஆறுவகைச் சமயம் வருமாறு : வைணவம், சமணம், பாஞ்சராத்திரம், பாட்டாசாரியம,் உலகாயதம், சூனியவாதம் என்பன. இச் சமயங்களின் நின்றவர் சமயங்கடந்த தனிமுதற் சிவத்தைக் காண்கிலர். இச் சமயத்தாரால் கூறப்
1. விரிவிலா. அப்பர், 4. 60 - 9. " பரிதி; " 5. 94 - 5. " தம்மை. சிவஞானபோதம், அவையடக்கம். " ஓதுசமயங்கள். சிவஞானசித்தியார், 8, 2 - 3. 2. சைவ - தாயுமானவர். 39. காடுங்கரையும், 2. " அறுவகைச். சிவஞானசித்தியார், மங்கலவாழ்த்து - 1.
|