593
 

1519. பரிசற வானவன் பண்பன் பகலோன்
பெரிசறி வானவர் பேற்றில் திகழுந்
துரிசற நீநினை தூய்மணி வண்ணன்
அரிதவன் வைத்த அறநெறி தானே.

(ப. இ.) மாயையின் குணங்கள் சிறிதும் இல்லாதவன் மேலாம் சிவபெருமான் ஒருவனே. அவன் எண்பெரும் அருட்குணங்களையுடையவன். இயற்கைப் பேரொளியாய் எவற்றினுக்கும் ஒளிகொடுப்பவனும் அவனே. மிகுதியும் உயர்ந்த தேவர்கள் அவனைத் தொழுவதால் தத்தம் பேறாகிய நிலையில் திகழ்கின்றனர். அவனை நம் ஆணவ முதலிய குற்றங்கள் நீங்கும்படி நெஞ்சே நீ நினைவாயாக. அவன் தூய பளிங்கு நிறத்தன். அவன் அருளிச்செய்த அறநெறியாகிய சன்மார்க்கம் மிக்க அருமையும் பெருமையும் வாய்ந்தது.

(அ. சி.) பரிசற வானவன் - மாயை இல்லாதவனான சிவன். பெரிசறிவானவர் - மிக்க அறிவுள்ள வானவர். தூய்மணி - படிகமணி. அரிதவன் - அரிய தவத்தைச் செய்து அடையக்கூடியவன். அறநெறி - சன்மார்க்கம்.

(18)

1520. ஆன சமயம் அதுஇது நன்றெனும்
மாய மனிதர் மயக்க மதுவொழி
கானங் கடந்த கடவுளை நாடுமின்
ஊனங் கடந்த வுருவது வாமே.1

(ப. இ.) அச் சமயம் நன்று இச் சமயம் நன்று என்று திருவருள் உணர்த்த உணரும் தன்மையில்லாதார் பிழைப்பின் பொருட்டு வஞ்சனையாகக் கூறும் மயக்கமொழிகளை ஒழிப்பாயாக. செந்தமிழ்க் கீதங்கள் தந்தருளிய சிவபெருமானை அவன் திருவருட்டுணையால் நாடுங்கள். நாடவே மலமாயை கன்மங்களாகிய குற்றம் நீங்கி எல்லாமாம் சிவபெருமானது உண்மையறிவின்ப வண்ணவடிவினைப் பெறுவீர்.

(அ. சி.) மாய மனிதர்-வஞ்ச மனிதர். கானங் கடந்த-தத்துவங்கள் கடந்த. ஊனம் - குற்றம்.

(19)

1521. அந்நெறி நாடி அமரர் முனிவருஞ்
செந்நெறி கண்டார் சிவனெனப் பெற்றார்பின்
முன்னெறி நாடி முதல்வன் அருளிலார்
சென்னெறி செல்லார் திகைக்கின்ற வாறே.

(ப. இ.) மேலோதிய நன்னெறியாகிய சிவனெறியைத் திருவருளாலுணர்ந்து அதனையே முதன்மை எனக் கைக்கொண்ட அமரரும் முனிவர்களும் திருவடியைத்தலைக்கூடும் செல்லும் நெறியினைக் கைக்கொண்டனர். அவர்கள் சிவமாம் பெருவாழ்வை எய்தினர். மக்களால் மாறுகொண்டு காலத்தால் பின்னும் முன்னுமாக அமைக்கப்பட்ட நெறிகளை நாடிச் செல்வோர் முதல்வன் திருவருள் பெறாதவராவர். ஆகவே, நன்னெறியாகிய செல்லும் நெறியிற் செல்லாதவராவர். அவர்கள் மயங்கும் மயக்கத்திற்கு ஓர் அளவில்லை.

1. இவ்வகைப்பல. 12. திருநாவுக்கரசர், 82