அன்பனை, அனைத்துயிர்க்கும் பேரின்பம் அருளும் உலக முதல்வனை, காதலுடன் வந்து கழல்பணிந்து உய்வீர்களாக. உயிர்ப்பு - மூச்சு. (அ. சி.) மெய்ய - மெய்யான. (3) 1535. சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியிற் பவனவன் வைத்த பழவழி நாடி இவனவன் என்ப தறியவல் லார்கட் கவனவ னங்குள தாங்கட னாமே.1 (ப. இ.) சிவபெருமான் ஆருயிர்கள் படிமுறையால் வழிபட்டு உய்யும்பொருட்டு அமைத்தருளிய தெய்வநெறியாகிய நன்னெறியில் அச்சிவபெருமான் ஏற்படுத்திய பழைமையான சன்மார்க்க நெறியை ஆராய்ந்து நோக்கினால் நன்னெறிச் செல்வார் இவன் அவன் என்னும் வேறுபாட்டினை ஒழித்து ஆருயிர்கட்கு அருள்செய்யும் பேருயிரே சிவன் என அழைக்கப்படுகின்றான் என்னும் உண்மை காண்பர். இவ் வுண்மை அறியவல்லார்களுக்கு அவ்வச் சமயங்கள் தோறும் சிவபெருமான் நின்று பயிற்சி வேறுபாட்டிற்குத் தகப் பயன் அருள்வன். (அ. சி.) பவன் - பரமசிவன். பழவழி - பழைமையான சன்மார்க்கம். (4) 1536. ஒத்த சமயங்கள் ஓராறு வைத்திடும் அத்த னொருவனாம் என்ப தறிந்திலர் அத்தன் ஒருவனாம் என்ப தறிந்திடின் முத்தி விளைக்கு முதல்வனு மாமே.2 (ப. இ.) அறுவகைச் சமயத்தையும் பருவத்திற்கேற்றவாறு அமைத்தருளியவன் சிவபெருமானே. அவன் ஒருவனே என்னும் உண்மையைப் பலரறிந்திலர். அத்தனாகிய அச் சிவன் ஒருவனே என்பதறிந்திட்டால், அங்ஙனமறிந்த மெய்யன்பர்க்கு வீடுபேற்றினை நல்கியருளும் முழுமுதல்வனும். அச் சிவபெருமானேயாவன். (5) 1537. ஆமா றுரைக்கும் அறுசம யாதிக்குப் போமாறு தானில்லை புண்ணிய மல்லதங் காமாம் வழியாக்கும் அவ்வே றுயிர்கட்கும் போமாறவ் வாதாரப் பூங்கொடி யாளே.3 (ப. இ.) அவரவர் நிலைமைக்கு ஏற்றவாறு கூறப்பட்டுள்ள ஆறு சமயங்கட்கும் பயன் முன்னேறிச் செல்வதற்கு வழித்துணையாம் புண்ணியம் ஒன்றுமேயாம். சிவபெருமான் திருவடியின்பத்தினை அளிக்கும்.
1. வாது. 5. அப்பர். 100 - 4. " ஆறொன்றிய " 4. 100 - 4. 2. ஓதுவித் " 4. 100 - 1. 3. கையிலிடு. " 4. 102 - 9. " திருமறையோ. 12. அப்பூதி. 16.
|