602
 

வெளிப்பட்டருளும் அகஒளி, புறவொளி, திருவுரு ஆகிய மூன்றுங் கடந்த அறிவு நிலையாகிய ஞானநெறியில் உணர்வுக்கு உணர்வாய்த் தோன்றும் பேரறிவுப் பேரொளியை அருட்கண்ணாற் காணின் அதுவே அரனெறியாகும். சிவபெருமானை முழுமுதலாகக்கொண்டு கொலையும் புலையுமொழித்துச் செந்தமிழ்த் திருநான்மறைவழியே செய்யும் நல வேள்வியே சிவவேள்வி என்க. அதுவே 'கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே பெற்றர்' செய்யும் சிவத்தொண்டாகும். 'பசுவேட்டு எரியோம்பு' மென்பதற்கு அனைத்துயிரும் இன்புற்று வாழவேண்டுமெனச் சிவவேள்வி சிறக்கப் பேணும் என்பதே பொருளாம். 'எரிபெருக்குவர் அவ்வெரி ஈசன, துருவருக்கம தாவ துணர்கிலார்' செய்யும் மயலுற்ற அயலவர் வேள்வியே பிறவேள்வி என்க. பசு - மன்னுயிர்த் தொகுதி.

(அ. சி.) மினற்குறியாளனை - மின்னல்போன்ற ஒளியுடையானை. அனற்குறியாளனை - சிவாக்கினி உருவமானவனை. நினைக்குறியாளனை - சகுணத்திருமேனியுடையானை.

(10)

1542. ஆய்ந்துண ரார்களின் ஆன்மாச் சதுர்பல
வாய்ந்துண ராவகை நின்ற அரனெறி
பாய்ந்துணர் வார்அரன் சேவடி கைதொழு
தேர்ந்துணர் செய்வதோர் இன்பமு மாமே.1

(ப. இ.) நெறிகளை ஆராய்ந்துணரும் தன்மையிலாதாராகிய ஆவிகளின் திறமைப்பாடு பலவாகும். வாய்ந்துணர்ந்து அவ் வழியிலே நின்று நன்னெறியாகிய அரனெறியிற் சென்று உணர்ந்து ஒழுகுவார் ஒரு வகையினர்; அரன் திருவடியிணையினைக் கைதொழுவர் மற்றொரு வகையினர். அங்ஙனம் ஏர்ந்துணர்ந்தொழுகுவார் எய்தும் பெரும் பயன் திருவடியின்பமேயாகும்.

(அ. சி.) வாய்ந்து உணராவகை - வாய்ந்து உணரும் வகை. (உணரா : செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்), ஏர்ந்து - சிவஞானம் கைவரப்பெற்று. உணர்செய்வது - அநுபவிப்பது.

(11)

1543. இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்
பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி
எத்தவ மாகிலென் எங்குப் பிறக்கிலென்
ஒத்துணர் வார்க்கொல்லை யூர்புக லாமே.2

(ப. இ.) நன்னெறியாகிய சிவனெறியிற் கொண்டுய்க்கும் எந்நெறிகளிலும் செய்யப்பெறும் தவங்களெல்லாம் அவ்வந்நெறியினிற்பார்க்கு ஏற்புடையனவே. எனவே இத்தவம் அத்தவம் என்று வேறுபடுத்திப் பேசுவோர் பித்தராவர். அத்தகையோரைக் காணில் நம் நந்தியாகிய சிவபெருமான் சிரித்தருள்வன். எவ்வகைத் தவமானாலென்ன, எவ்வகைப் பிறப்பு எய்தினாலென்ன, திருவருள் துணையால் திருவடியுணர் வெய்துவார் விரைந்து சிவவுலகு எய்துவர்.

(அ. சி.) ஒல்லை - சீக்கிரம். விரைவில்.

(12)


1. பெருகலாம். அப்பர், 5. 88 - 1.

2. ஒட்டாத." 4. 5 - 9.

" நமச்சி." 5. 97 - 22.