(ப. இ.) ஞாயிற்றின் கதிர்கண்டு அக் கதிரொளியை ஏற்று வெளிப்படுத்தங் கல் (சூரியகாந்தக் கல்) கதிர்க் கல் எனவும், திங்களின் கதிரையேற்றுக் குளிர்நீரை வெளிப்படுத்துங் கல் (சந்திரகாந்தக் கல்) நிலாக் கல் எனவும், தீயினைக் காண அதன் கதிரை வெளிப்படுத்தங் கல் தீக் கல் எனவும் வழங்கப்பெறும். இக் கல்லைச் சக்கிமுக்கிக் கல் என்பர். கதிர் கண்டவுடன் கதிர்க்கல் கனலைக் கக்கும். மதி கண்டவுடன் நிலாக் கல் குளிர்ச்சியைக் கக்கும். தீத்தட்டுங் கருவியாகிய சதியினைக் கொண்ட சக்கி - சாக்கி என்னும் தீக்கல் தீயினைக் கக்கும். மழுவாகிய தீயினை இடத்திருக்கையில் கொண்டருளிய சிவபெருமானை அருள் துணையால் அவன் இயற்கை எழில் வடிவில் காணலாம். அக் காட்சியான் ஆருயிர்கள் அனைத்தும் சிவனாம் நிலையினை எய்தும். கக்குதல் - காலுதல். (அ. சி.) மணி - முத்து. சதி - தீத்தட்டுங் கருவி; முக்கி. சாக்கி - சக்கி என்பதன் நீட்டல்; தீத்தட்டுங் கல், இவை இரண்டினையும், "சக்கி முக்கி" என்பதன் உலக வழக்கு. (8) 1626. நாடும் உறவுங் கலந்தெங்கள் நந்தியைத் தேடுவன் தேடிச் சிவபெரு மான்என்று கூடுவன் கூடிக் குரைகழற் கேசெல்ல வீடு மளவும் விடுகின் றிலேனே.1 (ப. இ.) நாடுதலாகிய சிந்தித்தலும், உறவாகிய முழுநேயமுங் கொண்டு எங்கள் நந்தியாகிய சிவபெருமானை அவன் அருள்விளக்கத் துணையால் தேடுவேன். தேடிச் சிவபெருமானென்று கூடுவேன். கூடி இடையறாது நினைக்கும் நினைவாகிய ஒலிக்கும் ஆண்மைக் கழலணிந்துள்ள திருவடிக்கே செல உடம்பைவிட்டு உயிர் நீங்கும்வரைத் திருவடியைப் பற்றுதலாகிய திருவைந்தெழுத்து ஓதுதலை நீங்கேன். (அ. சி.) நாடு முறவு கலந்து - உள்ளன்போடு. வீடு மளவும் சாகும்வரை. (9) 8. அவவேடம் (போலிக்கோலம்) 1627. ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன் வேடங்கள் கொண்டு வெருட்டிடும் 2பேதைகாள் ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியுந் தேடியுங் காணீர் சிவனவன் தாள்களே. (ப. இ.) கூடா ஒழுக்கத்தினராய்த் தவவேடம் கொண்டு பிறரை அஞ்சுவித்துத் திரிவார்க்குப் பயன் ஆடம்பரமான சோறு கறி உண்பதே
1. சூடுவேன். 8. திருவம்மானை, 17. 2. வலியில். திருக்குறள், 273. " தவமறைந் " 874.
|