(அ. சி.) கொல்லை - காடு. அடிநாடிகள் - திருவடி செல்லுதற்குரிய நாடிகள். பிறகிட்டு - பின்னிடச்செய்து. வாயில்கொண்டான் - அந்த நாடிகளை வழியாகக் கொண்டான். (4)
4. சதாசிவலிங்கம் (உலகமுதற் சிவம்) 1700. கூடிய பாதம் இரண்டும் படிமிசை பாடிய கையிரண் டெட்டும் பரந்தெழுந் தேடு முகம்ஐந்து செங்கணின் மூவைந்து நாடுஞ் சதாசிவ நல்லொளி முத்தே. (ப. இ.) ஆருயிர்கள் அன்பினால் வந்து கூடி இன்புறுதற் பொருட்டு அமைந்த திருவடிகள் இரண்டு. புகழ்ந்து கூறப்பட்ட திருக்கைகள் பத்து. விரிந்தெழுந்து நாடும் திருமுகங்கள் ஐந்து. ஆதிரை நாளாகிய செங்கைபோல் ஒளிதரும் கண்கள் பதினைந்து. இத்தனையும் கொண்டு விளங்கும் அருளோனாகிய சதாசிவக் கடவுள் நல்ல திருவருள் ஒளியாகிய முத்தாகும். (அ. சி.) கூடிய பாதம் - சேர்ந்துள்ள பாதம். பாடிய - புகழ்ந்து கூறப்பட்ட. செங்கணின் - சிவந்த கண்களில். (1) 1701. வேதா நெடுமால் உருத்திரன் மேலீசன் மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும் ஆதார சத்தியு மந்தச் சிவனொடுஞ் சாதா ரணமாஞ் சதாசிவந் தானே. (ப. இ.) அயன், அரி, அரன், ஆண்டான், ஐம்முகன் விந்துநாதம் இவற்றை இயைந்து இயக்கும் திருவருளாற்றல். அத் திருவருளாற்றலை மரமும் காழ்ப்பும்போல் விட்டு நீங்காதிருக்கம் சிவன் ஆகிய அத்தனையும் பொதுவாகச் சதாசிவன் எனப்படும். (அ. சி.) மீதான ஐம்முகன் - மகேசனுக்கு மேற்பட்ட சதாசிவன். சாதாரணமாம் - பொதுவாக. (2) 1702. ஆகின்ற சத்தியின் உள்ளே கலைநிலை ஆகின்ற சத்தியின் உள்ளே கதிரெழ ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்தபின் ஆகின்ற சத்தியுள் அத்திசை பத்தே. (ப. இ.) திருவருட்சத்தியினுள் விடுவித்தல் முதலிய ஐந்து கலைகளும் உண்டாம். அச் சத்தியின் அருளால் ஞாயிற்றின் கதிர்களண்டாம். அச் சத்தியினுள் சிவன் அமர்ந்தருளியபின் அத் திருவருள் பத்துப்புலமும் நிறைந்து இயக்கி அருள்வன்.
|