(ப. இ.) சிவபெருமான் மேல்ஓதிய முறையான் உலகத்துடன் பொருந்தி அவ் வுலகினை இயக்குகின்றனன். அதுபோல் உடலுடனும் உயிருடனும் பொருந்தி அவ் வுடல் உயிர்களை இயைந்து இயக்குகின்றனன். இவை அவனது பேரருட் பெருமாண்பாகும். அத்தகைய சிவனடி நம் முடிமேல் சூட்டப்பெறுதலால், அழகிய தலை யெனப்படும் தென்தலையாகும். தென் - அழகு. நம்மை எல்லாம் திருத்தி யாட்கொள்ளும் சிவனடி இயல்பாகவே திருந்திய அடியாகும். அத் திருவடியை நெஞ்சத்தினுள்ளே நின்று தொழுதனென். தென்னாடு - அழகிய நாடு. (அ. சி.) ஒன்றியவாறு - சிவன் உலகத்தில் பொருந்தி இருக்கும் முறைமை. (18) 1718. உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக் கொணர்ந்தேன் குவலயங் கோயிலென் நெஞ்சம் புணர்ந்தேன் புனிதனும் பொய்யல்ல மெய்யே பணிந்தேன் பகலவன் பாட்டு மொலியே.1 (ப. இ.) மேலோதியவாற்றால் உலகினில் நிறைந்து நிற்கும் ஒண்பொருளாகிய சிவனை அவனருளால் உணர்ந்தேன். உலத்தின்கண் திருக்கோவில் கொண்டருள்வதுபோல் என் உள்ளத்தின்கண்ணும் திருக்கோவில் கொண்டருளப் பாடிப் பரவிப் பணிந்து வேண்டினன். ஈண்டுப் பரவுதல் நினைதல் மேற்று. அச் சிவனுடன் பின்னற் புணர்ப்பாய்ப் புணர்ந்தனன். புணர்ப்பு - அத்துவிதம். பகலவனாகிய சூரியனுக்கும் ஒளியருள்வது சிவனே. அவன்போல் அவன் உள்நின்று உணர்த்தி எழுப்ப அருளொலியாக நால்வர் திருமூலர் ஆகிய ஐவர் வாயிலாக வருவதாகிய செந்தமிழ்த் திருமுறையும் திருமுறையும்போன்ற வேதாகமங்களும் அவற்றால் பெறப்படும் மெய்ப்பொருளாம் சிவனும் பொய்யல்ல மெய்யே ஆகும். "நம்மூல ராற்போற்ற நால்வரால் நாட்டநிலை செம்பொருட்சித் தாந்தசைவம் தேறு," (1703) என்பதனை ஈண்டு நினைவுகூர்க. (அ. சி.) கோயில் என் நெஞ்சம்-உள்ளம் பெருங்கோவில். இங்கே நெஞ்சம் என்பது உள்ளம். பகலவன் - சூரியனை உண்டாக்கிய சிவன். பாட்டும் ஒலி - ஒலிப்பாட்டு; நாத தத்துவத்தினின்றும் எழுந்த தமிழ் வேத ஆகமங்கள். (19) 1719. ஆங்கவை மூன்றினும் ஆரழல் வீசிடத் தாங்கிடும் ஈரேழு தானடு வானதில் ஓங்கிய ஆதியும் 2அந்தமு மாமென ஈங்கிவை தம்முடல் இந்துவு மாமே. (ப. இ.) மூவகை உலகினும் சிவச்சுடர் வீசுகின்றது. அதன்மேல் ஈரேழ் உலகினும் அச் சிவன் நடுவணதாகிய அறிவுப் பெருவெளியாக நின்றருள்வன். அவனே உலகினைப் படைத்தலால் ஆதியாகவும்,
1. வெறியார். அப்பர், 6. 43 - 4. 2. அவனவள். சிவஞானபோதம், 1.
|