(அ. சி.)அண்ணல் - பெருமை பொருந்திய கடவுள். வானுறுவார்கள் - தேவர்கள். மண்ணுறுவார்கள் - மானிடர்கள்; தூல தேகத்தை உடையவர்கள்; தேவர் - திவ்விய (சூட்சும) தேகத்தையுடையவர். புதன், வியாழம், வெள்ளி, செவ்வாய் முதலிய அண்டங்களில் உள்ளவர். (11) 12. மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள் எண்ணளந் தின்னம் நினைக்கிலார் ஈசனை விண்ணளந் தான்தன்னை மேல்அளந் தாரில்லை கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே. (ப. இ.)மால் வஞ்சனையாற் சென்று மாவலிபால் மூன்றடி மண் வேண்டி அவன் புனலுடன் பூச்சொரிந்து தரப்பெற்றுத் தன் ஈரடியால் மண்ணும் விண்ணும் அளந்து மற்றோரடிக்கு அவன் தலையில் அடி வைத்து அழுத்தி அவனை அழித்தனர் என்ப. அத்தகைய மாலும் மலரோனாகிய நான்முகனும் ஏனைத் தேவர்களும் தங்கள் தங்கள் மனத்தாலும் கருதிச் சிவனை நினைக்கும் ஆற்றலில்லாதவராவர். அச் சிவன் ஆருயிர்களின் நெஞ்ச வெளியினையும் அளந்து அப்பாற்பட்டவன் ஆவன். தன் திருவுள்ளமாகிய கருத்தளவானே எல்லாவற்றையும் தந்தருளுதலாகிய அளத்தலைச் செய்து கலந்தும் கடந்தும் நிற்பவனும் அச் சிவனே. கண் - கருத்து. (அ. சி.)கண்ணளந்து - எல்லா அண்டங்களையும் வரையறுத்து. விண்ணளந்தான் - ஆகாய தத்துவத்திற்கு அதிபதியாகிய சதாசிவன். எண் அளந்து - தங்களுக்குள்ள ஆயுட்காலத்தை எண்ணி. மலரோன் - அயன் என்னும்தேவர். மண்ணளந்தான் - மால் என்னும் தேவர். (12) 13. கடந்துநின் றான்கம லம்மல ராதி கடந்துநின் றான்கடல் வண்ணன்எம் மாயன் கடந்துநின் றான்அவர்க் கப்புறம் ஈசன் கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே. (ப. இ.)சிவவெருமான் மண்ணுலகைத் கடந்து நிற்கின்ற மலரோனாகிய ஆதியையும் கடந்து நின்றனன். அதுபோல் கடல் வண்ணனாகிய மாயனையும் கடந்து நின்றான். ஈசனாகிய அரனையும் கடந்து நின்றான். எல்லாவற்றையும் கடந்தும் நோக்கி நின்றருள்கின்றனன் அருளால். (அ. சி.)கமலம் மலராதி - பிரம உலகமாகிய வியாழ அண்டத்தையும்; கடல்வண்ணன் எம்மான் - விண்டு உலகமாகிய செவ்வாய் அண்டத்தையும்; அவர்க்கப்புறம் ஈசன் - அதற்குமேல் இருக்கப்பட்ட உருத்திரன் உலகமாகிய சுக்கிர அண்டத்தையும்; மகேசன் உலகமாகிய புதன் அண்டத்தையும்; எங்குங் கண்டு நின்றான் - எல்லாவற்றையும் கடந்து நின்றாலும் எல்லாவற்றிலும் நிறைந்து நிற்கின்றான். (13) 14. ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற வேதியு மாய்விரிந் தார்ந்திருந் தான்அருட் சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள் நீதியு மாய்நித்த மாகிநின் றானே.
|