712
 

மனம்பொருந்த இறைபணி கைகூட நிறைந்த பூவும் புனலும் தூவித் திருமுறைவழித் தொழுதிடுமின். இவ்வாறே நாடொறும் வழிபாடு செய்வீராக.

(அ. சி.) வென்று - புலன்களை வென்று. விரைப்பணி - தூபப்பணி. இறைபணி - பூசை. கூறியவாறு - தமிழ் வேதாகமங்களில் கூறியவாறு.

(17)

1809. சாத்தியும் வைத்துஞ் சயம்புவென் றேத்தியும்
ஏத்தியு நாளு மிறையை யறிகிலார்
ஆத்தி மலக்கிட் டகத்திழுக் கற்றக்கான்
மாத்திக்கே செல்லும் வழியது வாமே.

(ப. இ.) ஆடை அணிகலன் வெண்ணீறு சாந்து பூ முதலியன சாத்தியும், திருவுரு முதலியன அமைத்து நிலைநாட்டியும், இயற்கைத் தனிப்பெருங் கடவுள் என்று ஏத்தியும், அங்ஙனமே நாளும் தொடர்ந்து தொழுதும் சிவனை அவனருளால் உணர்கிலர் பலர். ஆத்தியாகிய ஆசைகளை ஒழித்து அதன்வழியாக மல அழுக்கு அற்ற இடத்துப் பெரிய வீடுபேற்றுக்குச் செல்லும் வழியுண்டாகும். அதுவே சிவவழிபாட்டுப் புண்ணியப் பேறென்க. மாதிக்கு - பெரிய வீடுபேறு. ஆத்தி: ஆர்த்தி என்பதன் திரிபு.

(அ. சி.) சாத்தியும் - பூ, ஆடை முதலியன சாத்தியும். வைத்தும் - உருவத்தில் அமர்த்தி வைத்தும். ஆத்தி - ஆசை. மலக்கிட்டு - ஒழித்து. அகத்து இழுக்கு - மனக்குற்றம். மாதிக்கு - முத்தி உலகம்.

(18)

1810. ஆவிக் கமலத்தின் அப்புறத் தின்புற
மேவித் திரியும் விரிசடை நந்தியைக்
கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைத்
தாவிக்கு மந்திரந் தாமறி யாரே.

(ப. இ.) ஆவிக்கமலமாகிய நெஞ்சத் தாமரையின் மேலாக ஆருயிர்கள் இன்புறும் வண்ணம் உச்சிக்குமேல் திகழும் பரவெளிக்கண் விளங்கா நின்ற விரிசடை நந்தியை, அவன் திரு அருளால் அப் பரவெளியினின்று 'சிவ' என அழைத்து, நெஞ்சத்தில் 'சிவய' எனக் கருதி, அங்கிருந்தும் திருவுருவின்கண் 'சிவயசிவ' என்று மறைமொழிந்து நிலைநிறுத்துதல் வேண்டும். இத்தகைய திருமுறைத் திருமந்திர வுண்மையினை ஒருசிலரே அறிவர். இதனை, அழைப்பு சிவ ஆர்சிவய ஆம் நினைப்பு மெய்க்கண், நுழைப்பு சிவயசிவ நோக்கு. என்பதனால் நினைவு கூர்க.

(அ. சி.) ஆவிக்கமலம் - சகசிர அறை.

(19)

1811. சாணாகத் துள்ளே அழுந்திய மாணிக்கங்
காணு மளவுங் கருத்தறி வாரில்லை
பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு
மாணிக்க மாலை மனம்புகுந் தானே.