719
 

1825. ஆறிடும் வேள்வி அவிகொளும் நூலவர்
கூறிடும் விப்பிரர் கோடிபே ருண்பதில்
நீறிடுந் தொண்டர் நினைவின் பயனிலை
பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே.

(ப. இ.) அருமறை நூலவர் எனச் சொல்லிக்கொள்வோர் சொல்லும் வழியில் வேள்வி செய்வோர் அவர்களால் அந்தணர் என்று கூறப்படுவர். அத்தகைய பேர்கொண்டோர், கோடிக்கணக்கானவர் உண்பதற்கு ஒரு பயன் உண்டென்றால் அப் பயன் திருவெண்ணீறணியும் சிவத்தொண்டர்க்கு ஒரு பிடி சோறு அளிக்க வேண்டுமென்று அன்புடன் நினைக்கும் நினைவின் பயனுக்கு ஒருசிறிதும் ஒவ்வாதென்க. எனவே சிவனடியார்களுக்கு விருந்தயர்தலே பெரும்பேறென்க.

(5)

1826. ஏறுடை யாயிறை வாஎம்பி ரானென்று
நீறிடு வாரடி யார்நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சடை யண்ண லிவரென்று
வேறணி வார்க்கு வினையில்லை தானே.1

(ப. இ.) திருவைந்தெழுத்தோதித் திருநீறு அணியுங்கால் ஏறுடையாய் எனவும், இறைவா எனவும் எம்பிரான் எனவும், உள்ளன்பால் ஓதுவர். அவ்வாறு ஓதித் திருவெண்ணீறணியும் மெய்யடியார்கள் இயங்கும் தேவர்கள் ஆவர். அம் மெய்யடியார்களை ஒருவர் ஆறணி செஞ்சடை அண்ணலாகிய சிவபெருமான் இவர்களே என்று நினைதல் வேண்டும். அங்ஙனம் நினைந்து அம் மெய்யடியார்களைச் சிறப்பாக வழிபாடுவார்க்கு முத்திற வினைகளும் மூளா என்க. முத்திற வினைகளாவன: எஞ்சுவினை, ஏன்றவினை, ஏறுவினை என்பன. இவற்றை முறையே சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் என்ப.

(அ. சி.) வேறணிவார் - அடியாராகக் கருதிப் பூசிப்பவர்.

(6)

1827. சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட
பேர்நந்தி யென்னும் பிறங்கு சடையனை
நானொந்து நொந்து வருமள வுஞ்சொல்லப்
பேர்நந்தி யென்னும் பிதற்றொழி யேனே2

(ப. இ.) மெய்யடியார்கள் அருளால் சிவனையே நினைந்து திருமுறை ஓதி, இறைபணி நிற்பர். அவர்கள்பால் சிவன் தயிரில் நெய் போல் விளங்கித் தோன்றுவன். அதனால் அவ்வடியார்கள் திருமுகம் சிவப் பொலிவுடன் தோன்றும். அத் தோற்றம்பற்றி அவர்களைச் சிவனெனவே அழைப்பர். அத்தகைய பேர் வழங்கும் நந்தியென்னும் விளங்கு திருச்சடையுடையவனைப் பன்னாளாயினும் என்னையாள எழுந்தருளும்வரை நான் வருந்தி வருந்தி ஐந்தெழுத்தோதி அழைப்பன். அங்ஙனம் சிவன் நேர்ந்து என்னை ஆட்கொள்ளும்வரை பேரன்பால் நந்தியென்னும் பெயரைப் பிதற்றொழியேன். நந்திநாமம் 'நமசிவய' என்க.


1. கருவாய்க். அப்பர், 4. 95 - 6.

2. சிவனெனும். அப்பர், 4. 113 - 9.