யினைப் பெற்றும் பெறுதற்கரிய சிவபெருமான் திருவடியிணையைப் பேணுகின்றிலர். இவர்கள் பெறுதற்கரிய பிராணிகளாவர். இவர்கள் ஆறறிவுயிரோடு பிறந்தும் ஐயறிவு விளங்கும் விலங்கு முதலியவற்றோடும் ஒப்பாகார் என்னும் கருத்தால் 'பிராணிகள்' என்றருளினர். இத்தகையோர் பெறுதற்கரிய சிவபெருமான் திருவடிப்பேற்றின் நற்பேறு இழந்தோராவர். சிறுபான்மை யானை சிலந்தி முதலியனவும் (2057) வழிபடுவது கேட்கப்படுதலின், வழிபடாதார் விலங்கினும் தாழ்வாவர். (அ. சி.) பெறுதற்கரிய பிறவி - மானிடப்பிறவி. பெறுதற்கரிய பேறு - முத்தி இன்பம். (7) 2053. ஆர்வ மனமும் அளவில் 1இளமையும் ஈரமும் நல்லவென் றின்புறு காலத்துத் தீர வருவதோர் காமத் தொழில்நின்று மாதவன் இன்ப மறந்தொழிந் தார்களே. (ப. இ.) 'காலமுண்டாகவே காதல்செய்து உய்ய' வேண்டுவது அனைவர்க்கும் அருளால் அமைந்துள்ள அருங்கடன். அக் காலமே ஒரு பொருளினிடத்துச் செல்லும் அன்பின்பெருக்காம் ஆர்வமனம் சோர்வின்றித் தோன்றும் காலம். தோன்றியவாறு தொழில்புரிவதற்கேற்ற அளவில்லாத ஊக்கமுந்தும் காலம் இளமைக்காலம். கருதியதை மறவா நினைவுடன் கருதற்காகும் காதலாம் ஈரமுடைய காலமும் அதுவே. இவையனைத்தினாலும் எய்தும் இன்பினை நல்லவென்றுகொண்டு இன்புறும் காலமும் அதுவே. அக் காலத்துப் பிறவியால் வரும் பெருந்துன்பம் நீங்குதற்குப் பற்றறுதல் வேண்டும். பற்றறுதற்குப் பற்றற்றான் பற்றினைப் பற்றுதல்வேண்டும். அதற்கு மாறாகச் சிவபெருமான்மாட்டுச் செல்லுவதோர் பெரும் பற்றாகிய பத்தி நீங்கவருவது உலகியற் பொருள்களில் செல்லும் காமம் அக் காமத்தொழிலிலேயே கன்றியமனத்தராய் நின்று மாதவன் இன்பத்தை மறந்தொழிந்தார்கள் மாண்பிலா மாக்கள். மாதவன்: மாதோடு கூடியவன்; பெரும்தவத்தையுடையவன். மாதர் அழகாதலால் யாவர்க்கும் அழகினைச் செய்வது வனப்பாற்றல். அவ் வாற்றலையுடையவன் மாதவன். இதுவே 'சிவ' என்னும் எழுத்தில் பேசும் எழுத்தாய்ப் பிறக்கும் 'வ' என்னும் எழுத்தின் சொற்பொருள். (அ. சி.) தீர - சிவபத்தி ஒழிய. மாதவன் - சிவன். (8) 2054. இப்பரி சேயிள ஞாயிறு 2போலுரு அப்பரி சங்கியின் உள்ளுறை 3யம்மானை இப்பரி சேகம லத்துறை யீசனை மெய்ப்பரி சேவின வாதிருந் தோமே.
1. இளைய. அப்பர். 5. 66 - 3. " முன்பெலாம். அப்பர், 4. 28 - 1. " வேண்டின். திருக்குறள், 342. 2. காலையேபோன். 11. காரைக். அற்புதத், 65. " காலையிற் அப்பர், 4. 64 - 4. 3. அஞ்செழுத்தா. சிவஞானபோதம், 9. 3- 1.
|