832
 

யும் பொருந்தியவராய்ப் பிறப்பு இறப்புக் கருமங்களிலே ஈடுபட்டும் அவர்தம் வாழ்நாள் வீண்நாள் ஆகக் கழிதல்கண்டு கழிவிரக்கங்கொண்டு சிவகுருவாய்த்தோன்றி நன்னெறிகாட்டி ஆட்கொள்வன். அங்ஙனம் ஆட்கொண்டருளும் அச் சிவகுருவைச் சிவனென்றே வழிபடுதல்வேண்டும். அச் சிவகுரு குற்றமற்ற திருவடியுணர்வு கைவந்த மெய்ஞ்ஞானியராவர். அவரைச் சிவபெருமானென்று மெய்ம்மையாகக் கூறுதலல்லாமல் வேறெதுவும் கூறுதல் ஆகாதென்க.

(அ. சி.) கோதிலன் - குற்றம் இல்லாதவன். பரம் - சிவம்.

(18)

2082. ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புற
மேற்கொண் டவர்வினை போயற நாடொறும்
நீர்க்கின்ற செஞ்சடை நீளன் உருவத்தின்
மேற்கொண்ட வாறலை வீவித்து ளானே.

(ப. இ.) சிவகுருவானவர் செவ்விய வாய்ந்த நல்லாரை ஆட்கொண்டவராவர். அச் சிவகுருவினை ஒப்பில்லாத முழுமுதல்வனாகிய சிவபெருமான் என்றே உட்கொண்டு அவர்மாட்டுக் காதல் மிக மேற்கொண்டவர் மாணவர் ஆவர். அம்மாணவர்தம் வினையை நாடொறும் போயறச் செய்தருளுகின்றனன் சிவன். அருளின் தன்மை வாய்ந்த செவ்விய திருச்சடை வாய்ந்து என்றும் நின்றுநிலவும் அழிவில்லாதவன் சிவபெருமான். அம் மாணவர் சுட்டியுணரப்படும் உலகியல் உருவத்தின்மேற்கொண்ட மன அலைச்சலை அகற்றியருள்பவன் சிவன். நீர்க்கின்ற : அருள் தன்மை வாய்ந்த. நீர் - அருள். ஆறலை - அலைச்சல். வீவித்தல் - அகற்றல்; அழித்தல்.

(அ. சி.) உருவத்....ளானே - பிறந்து அலையும் வருத்தத்தை நீக்குவான்.

(19)

ஏழாம் தந்திரம் முற்றும்