2086. இரதம் உதிரம் இறைச்சிதோல் மேதை மருவிய வத்தி வழும்பொடு மச்சை பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி உருவம லாலுடல் ஒன்றென லாமே. (ப. இ.) இவ்வுடம்பு பாழாகிய மாயையின் காரியமாக வருவது. பாழ் - அருவம். காரணமாயை - அருவம். காரியமாயை - உருவம். உபாதி - காரியம். இவ்வுடம்பு எழுவகைப் பொருள்களால் யாக்கப்பட்டது. அவை முறையே சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, எலும்பு, மச்சை - மூளை, சுக்கிலம் - வெண்ணீர். இத்தகைய ஏழு பொருள்களின் கலப்பு உடம்பு என்னும் உண்மை அறிய வந்தால் இவ்வுடம்பை ஒரு பொருளென்று யாரும் மதித்துக்கூறி மகிழமாட்டார். இத் திருப்பாட்டின்கண் தோல் ஒரு தனிப்பொருள்போல் கூறப்பட்டுள்ளது. வழும்பும் மச்சையும் ஒன்றாகக் குறிக்கப்பட்டுள்ளன. (அ. சி.) இரதம் - அன்ன ரசம். அத்தி - எலும்பு. வழும்பு - நிணம். மச்சை - எலும்புக்குள்ளிருக்கும் பொருள். உபாதி - காரியம். (4) 2087. ஆரே அறிவார் அடியின் பெருமையை யாரே அறிவார் அங்கவர் நின்றது யாரே அறிவார் அறுபத்தெட் டாக்கையை யாரே அறிவார் அடிக்காவ லானதே. (ப. இ.) திருவருள் துணையில்லாமல் திருவடியின் பெருமையை அறியும் வன்மையுடையார் யாவர்? பேருயிராகிய சிவபெருமான் ஆருயிருடன் கலப்பால் பிரிப்பின்றி ஒன்றாகவேநிற்பன். அவ்வாறு நிற்கும் தன்மையை அறிவார் யார்? மாயையின் காரியத்தின் காரியத்தை அறுபதாகக் காண்கின்றனர். அவை வருமாறு : பூதங்கள் ஐந்தின் கூறு 25, செய்கருவி 5, காற்று 10, நாடி 10, ஓசை 4, பற்று 3, குணம் 3. ஆக (2139) அறுபது. இவற்றின் விரிவை எம்மால் எழுதப்பட்ட சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தின்கட் காண்க. எட்டு புரியட்ட நுண்ணுடல். இத்தகைய அருமையான உடல் தலையாய சிவபெருமானுக்குச் சிறந்த உடம்பாகும். இதுவே நடமாடுங் கோவிலாகும். அடிக்காவல் - திருக்கோவில். (அ. சி.) அடி - சிவன் திருவடி. அவர் - சிவன். அறு - நீங்கும் பத்தோடு - பத்து வாயுக்களோடு. அடிக்காவல் - சிவ ஆலயம் (காவல் - ஆலயம் - 2-ம் திருவானைக்காவல் - திருக்கோடிக்காவல்). (5) 2088. எண்சா ணளவால் எடுத்த வுடம்புக்குட் கண்கால் உடலிற் கரக்கின்ற கைகளிற் புண்கால் அறுபத்தெட் டாக்கை புணர்க்கின்ற நண்பால் உடம்புதன் னாலுடம் பாமே.
|