2139. ஆகின்ற தொண்ணூறோ டாறும் பொதுஎன்பர் ஆகின்ற வாறா றருஞ்சைவர் தத்துவம் ஆகின்ற நாலேழ்வே தாந்தி வயிணவர்க்கு ஆகின்ற நாலாறை யைந்துமாயா வாதிக்கே. (ப. இ.) சிவபெருமானின் திருவுள்ளக் குறிப்பினால் முதற்காரணமாகிய மாயையினின்று காரியமாகத் தோன்றும் மெய்கள் தொண்ணூற்றாறு. ஆகின்ற என்பதற்குக் காரியமாக ஆகின்ற என்றும், ஆருயிர்கட்கு நன்மைக்குத் துணைநிற்பதாகின்ற என்றும் இருபொருளும் பொருந்தும். அது, 'மாயா தனுவிளக்காம்' என்னும் மெய்கண்டார் அருள்மொழியால் விளங்கும். இத்தொண்ணூற்றாறினையும் பலவேறு கொள்கையினரும் பொதுவாக ஒப்புக் கொள்கின்றனர். சிறப்பாக ஒப்புக்கொள்ளும் மெய்ம்முறையில் வேறுபடுகின்றனர். அவருள் அருஞ்சைவராகிய செம்பொருட்டுணிவினர் முப்பத்தாறு மெய்கள் சிறப்பினை உடையவென அளவைமுறையான் அறுதியிட்டு உறுதி கூறுகின்றனர். செம்பொருட்டுணிவினர் - சித்தாந்தசைவர். வேதாந்தி என்று கூறப்படும் மறைமுடிவினர் - சித்தாந்தசைவர். வேதாந்தி என்று கூறப்படும் மறைமுடிவினர் இருபத்தெட்டு (2136) மெய்கள் கூறுகின்றனர். வயிணவர் இருபத்துநான்கு மெய்கள் கூறுகின்றனர். மாயாவாதி என்னும் ஒரு பொருட் கொள்கையினர் இருபத்தைந்து மெய்கள் கூறுகின்றனர். ஒரு பொருட் கொள்கை - ஏகான்ம வாதம். வைப்புமுறையில் இருபத்துநான்கு மெய்களுக்குமுன் இருபத்தைந்து மெய்கள் கூறப்பெறுதல்வேண்டும். அங்ஙனமிருப்பவும் ஈற்றில் ஓதப்பெற்றது தலை தடுமாற்றமாகும். 'தலைதடுமாற்றம் தந்து புணர்த்தல்' என்பதோர் உத்தி. அதனால் மாயாவாதிகளின் மாண்பின்மை புலனாம். என்னை, அவர்கள் உயிர்களே இல்லை என்று மயங்கிக்கூறும் எல்லையில் பாவத்தினர். என்னை, 'மிண்டிய மாயாவாதம் என்னும், சண்ட மாருதம் சுழித்தடித்தார்த்து' என (போற்றித் திருவகவல் - 55 - 1) ஆளுடைய அடிகளும், 'யாங்க ளே கடவு ளென்றிடும் பாதகத் தவரும்' (பன்முகச். சிற்சுகோதய விலாசம் 10) எனத் தாயுமானச் செல்வரும் அருளிய திருவருள் மொழிகளான் உணரலாம் என்க. மாயாவாதி மூலப்பகுதி மாயையே உலகிற்கு முதல் என்று கூறுபவன். இவனைச் சாங்கியன் எனவும் கூறுப. இவன் கடவுள் ஒருவன் உண்டெனக் கொள்ளாப் பாழ்ங்கோளன். இங்ஙனம் கூறலும் ஒன்று. அதனால் அம்மாயாவாதி ஈற்றில் வைக்கப்பட்டனன் என்க. வைணவர்க்கு உடன்மெய்யாகிய மூலப்பகுதியுடன் இருபத்துநான்கென்ப. (அ. சி.)36 தத்துவங்கள் சைவர்களுக்கு28" வேதாந்திக்கு24" வைணவர்களுக்கு25" மாயாவாதிக்கு. (12) 2140. தத்துவ மானது தன்வழி நின்றிடில் வித்தக னாகி விளங்கி யிருக்கலாம் பொய்த்தவ மாமவை போயிடு மவ்வழி தத்துவ மாவ தகரஎழுத் தாமே.1
1. பசித்துண்டு. சிவஞானபோதம், 8. 1 - 2
|