(ப. இ.) ஆருயிர் ஆணவத்துடன் ஒட்டித் தன்னையறியாது நிற்கும் நிலை அப்பால் நிலையாகும். அப்பால் நிலை: துரியாதீதநிலை. ஆணவமல வாற்றலைத் தேய்த்தற்பொருட்டுச் சிவபெருமான் தொன்மைக்கன்மமாம் ஊக்கத்தைச் சேர்த்து மன்னுவிப்பன். அதனால் அது பேருறக்க நிலையாகும். பின் வினைக்குப் பற்றுக்கோடும் செய்தற்கிடனும் விளைபயனுமாகத் திகழும் மாயையினைப் பொருத்துவிப்பன். அந்நிலை உறக்க நிலையாகும். காதலென்பது இடவாகுபெயராக1 மாயையைக் குறித்தது. இம் மூன்று நிலையினும் ஆருயிட்கட்கு வினைநுகர்வு இன்று. கனவு நனவுகளாகிய இரண்டின்கண்ணும் முறையே நுண்ணிய நுகர்வும் பரிய நுகர்வும் உள்ளன. அதனால் அவ்விரு நிலையும் நுகர்வு நிலையாகும். (அ. சி.) தற்கு - தனக்கு. காமியம் - கன்மம். காதலாம் - மாயையாம். (9) 2156. நனவிற் கனவில்லை ஐந்து நனவிற் கனவிலாச் சூக்குமங் காணுஞ் சுழுத்தி தனலுண் பகுதியே தற்கூட்டு மாயை நனவிற் றுரிய மதீதந் தலைவந்தே. (ப. இ.) நனவிற் கனவில்லையாதலின் அந்நனவின்கண் ஐம்பொறியும் செம்மையாகத் தொழிற்படும். நனவின்கண் கனவு நிகழாத உறக்கம் சுழுத்தி எனப்படும். அதில் மனமுதலிய நுண்பொறிகள் தொழிற்படும். தன்னைச் சார்ந்துள்ள மாயை என்னும் மூலப்பகுதியின் நுகர்வே பேருறக்கநிலையாகும். நனவில் அப்பால்நிலை தன்னை வேறெனவுணரும் நிலை பொருந்தியதாகும். அதீதம் - அப்பால். (10) 2157. ஆறாறில் ஐயைந் தகல நனாநனா வாறா மவைவிட வாகு நனாக்கனா வேறான ஐந்தும் விடவே நனாவினில் ஈறாஞ் சுழுத்தி யிதின்மாயை தானே. (ப. இ.) அருஞ்சைவர் மெய்கள் (2139) முப்பத்தாறனுள் உடன்மெய் இருபத்துநான்கு, உணர்வுமெய் ஏழனுள் ஆள் ஒன்று ஆக இருபத்தைந்து கருவிகளும் நீங்க எஞ்சியுள்ள உணர்த்துமெய் ஐந்தும் உணர்வு மெய்களுள் ஊழி, ஊழ், உழைப்பு, உணர்வு, உவப்பு, மருள் என்னும் ஆறும் ஆகப்பதின் ஒன்றும் நனவின் நனவில் தொழிற்படும். உவப்பு: விழைவு; அராகம். நனவின் நனவு சாக்கிரம் சாக்கிரம். நனவிற் கனவு உணர்த்து மெய் ஐந்தும் நீங்கினநிலை. ஊழி, ஊழ், உழைப்பு, உணர்வு, உவப்பு, மருள் என்னும் உணர்வுமெய் 'ஆள்' நீங்கிய ஆறும் தொழிற்படும். இதுவே நனவிற் கனவாகும். இவ்வாறும் மிக நுண்மையாக நிகழும்நிலை நனவில் உறக்கமாகும். நனவிற் பேருறக்கம் மருளுடன் மட்டும்கூடி நிற்றல். மருள் - மாயை. ஈண்டு விலக்கப்பட்ட ஆள் சிறப்புநிலை என்க. (அ. சி.) ஒவ்வொரு அவத்தையிலும் கழியும் தத்துவங்கள் இன்ன என இதில் கூறப்பட்டுள்ளது. (11)
1. நோயெல்லா. திருக்குறள். 320. " வெவ்வினை. சீவக, 13. முத்தி - 164.
|