876
 

(ப. இ .) வளிபத்தும் நுண்ணுடம்புக் கருவிகள் எட்டும் ஆகப் பதினெட்டும் இருவினை முளைக்கும் கண்களாகும். இவை கதறி எழுவன ஆகும். அவற்றுள் சிதறுண்டு எழும் நும் எண்ணமாகிய சிந்தையை அகற்றுதல் வேண்டும். அதுவும் நும்நிலை கெடாமுன்னம் நன்னெறி நான்மையாம் செந்நெறிவழி நின்றால் கைகூடும். அவ் வினைகளெல்லாம் நடுங்கும்படி வந்தருள்கின்ற சிவபெருமான் சிறந்து வெளிப்பட்டு அருள்வன். ஆனை: ஆன் + ஐ - ஆனை. ஆனாகிய ஆருயிர்கட்கு ஐயாகிய தலைவன் சிவன். 'ஐ' தலைவன் என்பதனை 'ஐயர் யாத்தனர் கரணம்' (தொல். பொருள் - 145) என்பதனால் உணர்க.

(அ. சி.) பதினெட்டு - புரியட்டகமும் தசவாயுவும். விதறு - கெடுதி. ஆனை - சிவம்.

(29)

2176. நனவகத் தேயொரு நாலைந்தும் வீடக்
கனவகத் தேயுட் கரணங்க ளோடு
முனவகத் தேநின் றுதறியுட் புக்கு
நினைவகத் தின்றிச் சுழுத்திநின் றானே.

(ப. இ .) நனவின்கண் காணப்படும் கருவிகள் இருபது. அவை அறிதற்கருவி ஐந்து, செய்தற்கருவி ஐந்து, அவற்றால் கொள்ளப்படும் புலன்கள் பத்து ஆக இருபது. கனவகத்துத் தொழிற்படும் உட்கருவிகளுடன் ஆருயிர் செல்லுங்கால் நனவகத்துக் கருவிகள் விலகும். கனவகத்துக் கருவிகளும் முனவாகிய குற்றமுடையன என்பதுபோல் உதறித்தள்ளி நினைவும் ஒடுங்க உறக்கத்தில் நிற்கும். முனவு - குற்றம்.

(அ. சி.) நாலைந்து - மண் முதல் இருபது தத்துவங்களும்.

(30)

2177. நின்றவன் ஆசான் நிகழ்துரி யத்தனாய்
ஒன்றி யுலகின் நியமாதிக ளுற்றுச்
சென்று துரியாதீ தத்தே சிலகாலம்
நின்று பரனாய நின்மல னாகுமே.

(ப. இ .) இவ்வாறு நிற்கும் உயிர் ஆசான் திருவருளால் நனவிற் பேருறக்கத்தனாய் உலகத்துடன் பொருந்திச் செய்யவேண்டும் கடமைகளைச் செவ்வையாகச் செய்து நின்றால் அப்பால் நனவிற்செல்வது வாய்க்கும். அதன்கண் சிலநாள் உறைத்து நிற்றல் வேண்டும். இயல்பாகவே பாசங்களின் நீங்கிய சிவபெருமானின் திருவடிப்பேற்றால் மலம் நீங்கித் தூய்மை எய்தும். இதுவே ஆருயிர் பரனாய் நின்மலனாம் நிலைமை எய்துவது என்க.

(31)

2178. ஆனவவ் வீசன் அதீதத்தில் வித்தையாத்
தானுல குண்டு சதாசிவ மாசத்தி
மேனிகள் ஐந்தும்போய் விட்டுச் சிவமாகி
மோன 1மடைந்தொளி மூலத்த னாகுமே.


1. சூக்கும. சிவஞானசித்தியார், 1. 1 - 23.