யுணர்வால் இச் சூழ்ச்சி உண்மையினை உணர்வோர் அப் பெருமானின் திருவடியைச் சூடிப் பேரின்பம் உற்றுத் திகழ்வராயினர். (அ. சி.) புள்ளினம் - ஆன்மாக்கள். மாது - சத்தி. வேறு - வேறுபாடு. சூது - சூழ்ச்சி. (34) 2181. கருத்தறிந் தொன்பது கண்டமும் ஆங்கே பொருத்தறிந் தோன்புவ னாபதி நாடித் திருத்தறிந் தேன்மிகு தேவர் பிரானை வருத்தறிந் தேன்மன மன்னிநின் றானே. (ப. இ.) திருவருட் கருத்தை உணர்ந்து மூலமுதல் உச்சி யீறாகச் சொல்லப்படும் நிலைகள் ஆறும், ஞாயிறு, திங்கள், தீ என்னும் மண்டலம் மூன்றும் ஆகிய ஒன்பதும் கண்டம் எனக் கூறப்படுகின்றன. இவற்றை அகத்தே பொருத்தியமைத்த பொருவில் பெரும்பொருள் யாதென ஆராய்வோன் சிவபெருமான் என்று அருளால் அறிவன். அறிந்ததும் அனைத்துலகினுக்கும் முழுமுதலாய்த் திகழும் விழுப்பொருட் சிவன், புவனாபதியாவன் என்பதும் உணரவரும். அவனை அடியேன் திருந்தும் வண்ணம் அறிவேனாயினேன். அவனை யறிந்ததும் அவனே அனைத்துத் தேவர்கட்கும் முழுமுதல்வன் எனவும் உணர்ந்தேன். அதனால் அவனைத் தேவர்பிரானென்று அழைத்தேன். அந் நிலையில் முயற்சி வருத்தத்தை நாடாது நற்றவம் முயன்றேன். அச் சிவபெருமானும் சிறப்புடன் அடியேன்பால் நின்று நிலைத்து அருளினன். (அ. சி.) திருத்து - நன்றாக. வருத்தறிந்தேன் - தவத்தால் உடலை வாட்டிப் பின் அறிந்தேன். (35) 2182. ஆன விளக்கொளி தூண்டு மவனென்னத் தான விளக்கொளி யாமூல சாதனத் தான விதிமூலத் தானத்தில் அவ்விளக்கு ஏனை மதிமண்ட லங்கொண் டெரியுமே. (ப. இ.) விளக்குந் தன்மைத்தான திருவிளக்கின் ஒளியினைத் தூண்டுவோன் ஒருவன் உளனாவதுபோன்று ஆருயிரின் அறிவினை விளக்கும் இயற்கை அறிவுப்பொருளாவான் ஒருவன் வேண்டும். அவன் சிவபெருமானாவன். விளக்குத் தூண்டுவோரின்றியும் எரியுமன்றோ எனின்? எண்ணெய் திரி இவற்றுள் ஏதுங் குறைவிலாத இடத்துத் தூண்டுவோரின்றியும் எரியும் ஆயினும் எரியும் அவ் விளக்கு, திரியினைத் தானே தூண்டிக்கொள்ள மாட்டாது. அதனால் தீ திரியினைப்பற்றி எரிந்துகொண்டு உட்செல்லும். திரி எண்ணெயின் மேலிருந்தால் எரிந்துகொண்டிருக்கும். உட்புகுந்தால் அணைந்துவிடும். எண்ணெயும் திரியும் குறைவுற்றாலும் விளக்கு அணைந்துவிடும். ஆகவே எந்நிலையினும் திருவிளக்கினுக்குத் தூண்டுவோன் ஒருவன் வேண்டும். ஈண்டுத் தூண்டுவோன் விளக்கை வாடாது காப்போன். அதுபோல் விளக்க விளங்கும் அறிவினையுடைய ஆருயிர்க்கு விளக்கும் பேரறிவுப் பொருளாம் சிவபெருமான் என்றும் இன்றியமையாது வேண்டப்படுவன் ஆவன். அறிவினை விளக்கும் முதற்கருவியாகிய துணைகளைக் கொண்டு மூலத்திடத்து அவ் விளக்கினை ஏற்றுதல்வேண்டும். ஏற்றவே அது புருவநடுவாகிய மதிமண்டலத்தை ஒளியிடமாகக் கொண்டு விளங்கும்.
|