2192. தாவிய மாயையில் தங்கும் பிரளய மேவிய மற்ற துடம்பாய்மிக் குள்ளன ஓவல் இலக்கணர் ஒன்றிய 1சீகண்டர் ஆவிய னூற்றெட் டுருத்திர ராகுமே. (ப. இ.) தூவாமாயை கடந்த தூமாயை தாவியமாயை எனப்பட்டது. அம் மாயையினால் உடல்பெற்று அம் மாயையின்கண் உறைவோர் இருமலத்தாராவர். இவர்கள் இயல்பிலே இருமலத்தாரும் ஊழி முடிபாகிய பிரளயத்தில் திருவருளால் ஒருமலம் நீங்கிய இருமலத்தாரும் என இருவகையினராவர். ஒருமலமாகிய மாயை அகன்ற தன்மையர். மாயை அகன்ற தன்மை என்பது மயக்காது விளக்கும் மாயையினை உடையவர் என்பதாம். இது, பொலமுறும் வீடகன்று நலமுறும் வீட்டில் உறைவது போன்றதாகும். இங்குள்ளார் சீகண்டவுருத்திரர், நூற்றெட்டு உருத்திரர் முதலியோராவர். இச் சீகண்டவுருத்திரரே தமிழாகமமாகிய மெய்கண்ட நூற்களின் முதல்வராவர். இவர்கள் தூமாயையின்கண் ஆசான் மெய்யின் அடிப்பகுதியிலுறைவோராவர். இருமலம் : ஆணவம் கன்மம். (அ. சி.) தாவிய மாயை - சுத்த மாயை. (6) 2193. ஆகின்ற கேவலத் தாணவத் தானவர் ஆகின்ற வித்தேச ராமனந் தாதியர் ஆகின்ற எண்மர் எழுகோடி மந்திரர் ஆகின்ற ஈசர் அநேகரு 2மாகுமே. (ப. இ.) புலம்புநிலையினைச் செய்யும் ஆணவம்மட்டும் உடையார் ஒருமலத்தர். இவரை விஞ்ஞானாகலர் என்ப. இந் நிலையினையுடையார் அட்டவித்தேசரெனவும் கூறப்படுவர். இவர்கள் அனந்தர் முதல் எண்மராவர். எழுகோடி மந்திரமுதல்வர் முதல் பலராவர். வித்தை என்பது திருவடியுணர்வு என்பதாகும். வித்தியேசுரர் என்பது வித்தேசர் என நின்றது. இவர்கள் ஆண்டான் மெய்யின்கண் உறைவோராவர். மும்மலங்களும் முப்பத்தொரு மெய்களும் தொழிற்படுமாறு ஆவியின் அறிவைச் சுட்டறிவாக விளக்கிநிற்கும் 'அப்பாலாக்கல் முதல் நீக்கல்' ஈறாகக் கூறப்படும் ஐங்கலைகளுடன் கூடி நிற்பவர் மும்மலத்தர் - சகலர். கலர், கலைகளோடு கூடியவர். ச என்னும் வடமொழி இடைச்சொல் கலைகள் தம் மியல்பிற் குறையாது தொழிற்படுதலை யுணர்த்தும். சிவகுருவினருளால் உன்முகத்தே நோக்கும் ஆவியினோர் சிவனுகர்வு பெறுவர். அந் நுகர்வால் மருள்நீங்கும் மருள் நீங்கவே மாயை அகலும். மாயை அகலவே அவர் வினையும் மலமும் என்று சொல்லப்படும் இரு மலத்தோடு கூடிநிற்பர். ஆவயின் ஐங்கலைகள் ஆருயிர்க் கிழவர்கட்குள்ள அறிவு எதிர்முகத்தும் சுட்டற விளங்கும்படி அவரோடு கூடி விளக்கி நிற்கும். அந் நிலையில் அவர் இருமலத்தர் - பிரளயாகலரெனப்படுவர். பிரளயம் - ஒடுக்கம். பிர என்பது அத் தொழின் முற்றும் ஒடுங்குதலை யுணர்த்தும்.
1. போதமிகுத். சிவஞானசித்தியார், நூற்பெயர். 9. உன்னலரும். சிவப்பிரகாசம், பொது, 2 - 3.
|