885
 

நனவில் உறக்கப்பாடு நிலையினை எய்தினவர் (நனவிற் சுழுத்தி) அச் சிவனுகர்வால் ஊழை வெல்லுவர். அஃதாவது ஊழான் வரும் நுகர்வுகளால் மொத்துணார். அவ் வூழ் உடலூழாகக் கழியும் அகப்புறக் கலன்களாகிய அந்தக் கரணங்களுடனும் கூடார். கூடாராகவே கன்மமலம் நீங்கும். நீங்கவே ஏனை ஒரு மலமாத்திரமுடையராவர். ஆகவே அனைத்தையும் சுட்டியும் சுட்டாதாகிச் சிவவுருவாய்த் தெளிந்து நிற்கும்வண்ணம் அவர்தம் அறிவைப் பேரறிவாய் விளங்கும்படி விளக்கி நிற்கும் ஐங்கலைகளோடும் கூடிநிற்பர். அந் நிலையிற் பேரறிவினர் - எனப்படுவர். பேரறிவினர் - விஞ்ஞானாகலர். விஞ்ஞானாகலர் - ஒருமலத்தர்.

இவற்றை வரும் வெண்பாவால் நினைவுகூர்க :

"மும்மலத்தால் ஐங்கலைகள் முற்றுவிக்கும் சுட்டறிவாம்
அம்ம அவர்சகலர் ஆசானால் - அம்மைச்
சிவனுகர்வால் ஐங்கலைகள் சேரொடுக்கம் கன்மில்
சிவவறிவாய் ஆக்கமலத் தீர்வு."

(அ. சி) கேவலத்து ஆணவத்தானவர் - ஆணவமலம் மாத்திரம் உள்ள விஞ்ஞானாகலர்.

(7)

2194. ஆமவ ரிற்சிவ னாரருள் பெற்றுளோர்
போமலந் தன்னாற் புகழ்விந்து நாதம்விட்டு
ஓமய மாகி யொடுங்கலி னின்மலந்
தோமறு சுத்தா வவத்தைத் 1தொழிலே.

(ப. இ.) மேலோதிய தூமாயைக்கண் உறைவோர் சிவனருளாற் செவ்விவாய்த்து அவ் வொருமலம் அகன்று உயர்ந்தோரும் சிலர் ஆவர். அத்தகையோர் விந்துவாகிய ஒளியினையும், நாதமாகிய ஒலியினையும் விட்டகல்வர். இவ் விருமெய்களும் எல்லாரானும் புகழப்படுவனவாகும். இவ் விரு மெய்யினையும் விட்டோர் ஓமொழியுருவினராவர். அவ் வுருவின்கண் அடங்கிநிற்பர். அடங்குவதென்பது முனைப்பற்றுத் திருவருள் திருக்குறிப்பின்வழி ஒழுகுவது. இங்ஙனம் ஒழுகுவதனால் அவர் தூயோராவர். இதனையே குற்றம் நீங்கிய தூநிலைத் தொழிலென்பர். தூநிலை - சுத்தாவத்தை.

(அ. சி.) ஓமயமாகி - பிரணவ வடிவாகி.

(8)

2195. ஓரினு மூவகை நால்வகை யும்முள
தேரி லிவைகே வலமாயை சேரிச்சை
சாரிய லாயவை தாமே தணப்பவை
வாரிவைத் தீசன் மலமறுத் தானே.

(ப. இ.) புலம்புநிலையாகிய கேவலநிலை மூவகை என்ப. அவை புலம்பிற் புலம்பு, புணர்விற் புலம்பு, புரிவிற் புலம்பு என்பன. இவற்றைக் கேவல கேவலம், சகல கேவலம், சுத்த கேவலம் எனவும் கூறுப. இவையேயன்றி அவை நான்கு வகையாகக் கூறுப்படுவதுமுண்டு. அவை


1. மூவகை. சிவஞானசித்தியார், 1. 1 - 26.