888
 

(ப. இ.) உடன்மெய் இருபத்தைந்தும் ஆருயிர் உணர்வில் உணர்வுமெய் யாறுடன் ஒடுங்கும். அவ் வுயிர் பயிலும் அகத்தவ முறையினால் ஆசான் ஆண்டான் அருளோன் என்னும் மூன்று மெய்களும் ஒடுங்கும். உடனாய் நின்று கைகண்ட துணைபுரியும் அன்னை அத்தன் பாகத்தேயாகும். உடன்மெய் இருபத்தைந்து, உணர்வுமெய் ஒன்று, மூன்று கூடிய ஒன்று, இரண்டு கூடிய ஒன்று ஆக நாலேழாகிய இருபத்தெட்டாகும். இவ்விருபத்தெட்டு என்னும் எண் 'ஆகின்ற தொண்ணூற்' (2139)றோடு என ஓதப்படும் திருப்பாட்டில் 'ஆகின்ற (2136) நாலேழ் வேதாந்தி' என வரும் திருக்குறிப்பினை ஒத்திருப்பது நோக்குக.

(அ. சி.) மேல் மூன்று - காயபரம், வியோமம், பரம்.

(14)

2201. ஆணவத் தாரொன் றறியாத கேவலர்
பேணிய மாயைப் பிரளயா கலராகுங்
காணும் உருவினர் காணாமை காண்பவே
பூணுஞ் சகலர்முப் பாசமும் புக்கோரே.

(ப. இ.) மெய்யுணர்வாற் கட்டற்றவர் எனப்படும் ஒருமலம் மட்டும் உடைய விஞ்ஞானாகலர் மாயைவினை ஏதும் அறியாத தனி நிலையினர். இந் நிலையினை அருவநிலை எனலாம். தூமாயைத் தொடர்புடையார் இருமலக் கட்டுடையாராவர். இவர் பிரளயாகலர் எனப்படுவர். இவர் ஊழியாற் கட்டற்றவர். இந் நிலையினை அருவுருவ நிலை என்னலாம். மும்மலக் கட்டுடையார் (2193) சகலர் எனப்படுவர். இவர்கள் காணும் உருவினராவர். நிலையாமையுள்ள உலகினைக் காணாமை என்றனர். இவ் வுலகினைக் காண்பவர் முப்பாசமும் புக்கவராவர்.

(அ. சி.) காணும் உருவினர் - தூல சரீரமுடையவர்.

(15)

2202. ஆணவ மாகும் விஞ்ஞான கலருக்குப்
பேணிய மாயை பிரளயா கலருக்கே
ஆணவ மாயையுங் கன்ம மூன்றுமே
காணுஞ் சகலர்க்குக் காட்டு 1மலங்களே.

(ப. இ.) விஞ்ஞானாகலருக்குப் பிணிப்பு ஆணவம் ஒன்றேயாம். பிரளயாகலருக்கு ஆணவம் கன்மம் (தூமாயை) என்னும் இருமலப் பிணிப்பினராவர். மும்மலக்கட்டினராகிய சகலர்க்கு ஆணவம் கன்மம் தூவாமாயை என்னும் மும்மலப் பிணிப்புமுடையவராவர்.

(16)

2203. கேவலந் தன்னிற் கிளர்ந்தவிஞ் ஞாகலர்
கேவலந் தன்னிற் கிளர்விந்து சத்தியால்
ஆவயிற் கேவலத் தச்சக லத்தையும்
மேவிய மந்தி மாமாயை 2மெய்ம்மையே.

(ப. இ.) ஒருமலக் கட்டுடையார் தனிநிலையில் விளங்கிய விஞ்ஞானாகலராவர். அந் நிலையிற் றூண்டித் தொழிற்படுத்துவது அன்னை என்று


1. மெய்ஞ்ஞானந். சிவஞானபோதம், 8. 2 - 1.

2. சுத்தமாம். சிவஞானசித்தியார், 1. 2 - 29.