(அ. சி.) சுழுனை முதல் எட்டு - (1) துரியம், (2) துரிய சுழுத்தி, (3) துரிய கனவு, (4) துரிய நனவு, (5) சுழுத்தியின் துரியம், (6) சுழுத்தியில் சுழுத்தி, (7) சுழுத்தியில் கனவு, (8) சுழுத்தியில் நனவு. (33) 2220. ஆணவ மாகும் அதீதமேன் மாயையும் பூணுந் துரியஞ் சுழுத்திபொய்க் காமியம் பேணுங் கனவும் மாமாயை திரோதாயி காணு நனவில் மலக்கலப் பாகுமே.1 (ப. இ.) உயிர்ப்படங்குதல் அல்லது அதீதம் என்று சொல்லப்படும் அப்பால் நிலைக்கண் ஆணவமட்டும் ஆருயிர்களைப் பிணித்துநிற்கும். பேருறக்கத்தின்கண் தூவாமாயை புணர்ந்துநிற்கும். உறக்கத்தின்கண் காமியம் என்னும் இருவினைகள் கூடி நிற்கும். கனவின்கண் தூமாயை கூடிநிற்கும். நனவின்கண் நடப்பாற்றலாகிய திரோதாயியினுடன் ஐம்மலமும் பிணிப்புற்றிருக்கும். (34) 2221. அரன்முத லாக அறிவோன் அதீதத்தன் அரன்முத லாமாயை தங்கிச் சுழுனை கருமம் உணர்ந்து மாமாயை கைக்கொண்டோர் அருளு மறைவார் சகலத்துற் றாரே. (ப. இ.) அரன் முதலாக அறிவோனாகிய ஆருயிர் அப்பால் நிலைக்கண் தங்கும். அரன் முதலாகக் கொள்ளும் மாயை பேருறக்கமாகும். உறக்கத்தில் கருமமாகும். கனவில் மாமாயையாகும். நனவில் மறைப்பருளாகிய நடப்பாற்றல் மேலோங்கும். இந் நிலையே புணர்ப்பு நிலையாகும். புணர்ப்பு - சகலம். (35) 2222. உருவுற்றுப் போகமே போக்கியந் துற்று மருவுற்றுப் பூதம னாதியான் மன்னி வருமச் செயல்பற்றிச் சத்தாகி வைகிக் கருவுற் றிடுஞ்சீவன் காணுஞ் சகலத்தே. (ப. இ.) ஆருயிர்களுக்கு மாயாகாரிய உடம்பு எய்தியதும் உருவ நிலை எய்தும். அப்பொழுது வினைப்பயன் நுகர்வு உண்டாகும். அப்பொழுது பொறிகளால் புலன்களை நுகரும். அந் நுகர்ச்சி துற்று என்று ஓதப்பெற்றது. போகம் இன்ப துன்ப நுகர்வு. போக்கியம் நுகர்வுப் பொருள்கள். எடுத்துக்காட்டாகக் கண் நுகர்வுப்பொறி, காட்சி நுகர்வு. காணப்படும் திருக்கோயில் நுகர்வுப்பொருள். நுகர்வுக்கு வேண்டிய பூதம் மனம் முதலியவற்றுடன் வரும். மனம் பொறி முதலியவற்றால் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் அறிதற்பொருளும், நவிலுதல், நடத்தல், நற்பொருள் கொடுத்தல், கழித்தல், கலந்து களிப்புறல் என்னும் செய்தற்பொருளும் ஆகிய புலன்களைக் கொண்டின்புறும். இவற்றைச் சத்தாதி என்று ஓதினர். இந் நிலைக் கருவிகளுடன் ஆருயிர் கருவுற்றுப் புணர்வாகிய சகலத்தின்கண் காணப்படும்.
1. மாயா. சிவஞானபோதம், 4. 2 - 1.
|