(அ. சி.) இருவினை ஒத்திட - துன்ப இன்பங்களைச் சமமாகக் கருதுதல். மருவிட - பொருந்த ஆதனமன்னி - நிலைபெற்று. (37) 2224. ஆறாறு மாறதின் ஐயைந் தவத்தையோடு ஈறா மதீதத் துரியத் திவனெய்தப் பேறான ஐவரும் போம்பிர காசத்து நீறார் பரஞ்சிவ மாதேய 1மாகுமே. (ப. இ.) அருஞ்சைவர் மெய்கள் (2139) முப்பத்தாறாகும். இம் முப்பத்தாறு மெய்களுடன் கூடி ஆருயிர் ஐம்பாட்டினை எய்தும். ஐம்பாடாவன : நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல் என்பன. ஒவ்வொன்றும் ஐவைந்து நிலையினை எய்தும். அஃதாவது நனவில் நனவு, நனவிற் கனவு, நனவில் உறக்கம், நனவில் பேருறக்கம், நனவில் உயிர்ப்படங்கல் என ஐந்துநிலை உண்டாகும். இதுபோல் மற்றவைக்கும் கூட்டிக்கொள்க. இம் முறையால் நிலைகள் இருபத்தைந்தாகும். நிலை யெனினும் அவத்தை எனினும் ஒன்று. (ஆறாறும் ஆறு) முப்பத்தாறு மெய்களும் வழிகளாகும். ஐயைந் தவத்தை என்பது மேற்கூறிய இருபத்தைந்து நிலைகள். முடிந்த முடிபாகிய அப்பாலைக்கு அப்பால் அதீதத் துரியம் என்ப. செவ்விவாய்ந்த ஒருவன் அருளால் அந்தநன்னிலையை அடைவன். அடைந்தால் தூமாயைக்கண் வாழும் ஐவர் நிலையும் விட்டு நீங்கும். ஐவர் நிலைகளாவன: அத்தன், அன்னை, அருளோன், ஆண்டான், ஆசான் என்பன. இயற்கைப் பேரறிவுப் பேரொளியாய்த் திகழும் திருவெண்ணீற்றுத் திருக்கோலச் சிவபெருமான் ஆட்கொண்டருள்கின்றனன். அந் நிலையின்கண், அவன் ஆருயிர்க்கு இவர்தந்தூரும் எம்மானாக விளங்குகின்றனன். இவர்தந்தூர்தல் : இயைந்தியக்கல்; தூண்டித் தொழிற்படுத்தல்; அதிட்டித்தல்: ஆதேயம் என்பன ஒரு பொருள்கிளவிகள். ஆதாரம் இருப்பு, ஆதேயம் இருப்பது. சிவன் உலகியலில் ஆருயிர்களுக்கு இருப்பாகத் திகழ்கின்றனன். அக் குறிப்பே சிவன் பிறைசூடியருளியுள்ளான் என்பதன்கண் விளக்கமுறும். அதுபோல் வீட்டியலின்கண் ஆருயிர்கள் சிவனுக்கு இருப்பாகத் திகழ்கின்றன. அதுவே ஆதேயம். ஆதேயமாக இருப்பதென்பது அச் சிவன் ஆனேற்றின்மீது இவர்ந்து வருவதாகும். ஆதேயம் - தாங்கப்படுவது; இஃது எம்மான் இருப்பும் இருப்பதுவுமாயிருப்பன், செம்மான்பிறை ஏறு சேர்ந்து என்பதனால் உணர்க. சிவபெருமான் ஆருயிர்கட்கு இருப்பாங்கால் தோன்மேலாவன்; இருப்பது ஆங்கால் நெஞ்சத்தனாவன். இவ்வுண்மை "துஞ்சுங்கால் தோண்மேலராகி விழிக்குங்கால், நெஞ்சத்தராவர் விரைந்து" என்னும் நாயனார் பொதுமறையான் உணரலாம். துஞ்சல் - சிவனை மறத்தல். விழித்தல் - சிவனை நினைத்தல் 'பேறான ஐவரும்போம் என்பதற்கு மாறாகப் பேறானவை வரும்' எனப் பாடங்கொள்ளின் எண்பெரும் பேறும் வண்பெரும் வீடும் எய்தும் எனப்பொருள் கொள்க. (அ. சி.) ஐயைந்து அவத்தை - ஐந்து அவத்தைகள் ஒவ்வொன்றும் ஐந்தாக இருபத்தைந்து. அதீதத் துரியம் - துரியாதீதத்தில் துரியா தீதம் பேறானவை - பெறுதற்கு அரிய சித்திகளும் முத்தியும். வரும் - உண்டாகும். நீறார் - திருநீறு அணிந்த. (38)
1. ஆதனமு. திருக்களிற்றுப்படியார், 67.
|