(ப. இ.) யாவர்க்கும் யாவைக்கும் மேலாம் இயற்கையுண்மை அறிவின்ப மெய்ப்பொருள் பரமாகும். அப் பொருளை யடைதற்குக் 'குறிகளும் அடையாளமும் கோவிலும், நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்' பயிலத் தந்தருளிய பாங்கினன் எனவுணர்ந்து திருவருளால் பயின்று திருவடியடைவன். இதற்கு ஒப்பு. கற்றுத் தேர்ந்தானுள்ளம் கற்ற செய்யுள் வண்ணமாய்த் திகழ்வது. கற்றுக் கைவந்தவனுக்கு முன் கற்பதற்குத் துணையாயிருந்த ஏடு முதலிய எவ்வகைக் கருவியையும் அவன் கருதுவதற்கு இன்றியமையாமையும் இடனும் ஏற்படாதல்லவா? அதுபோல் திருவருளால் அகத்தவம்புரிவார்க்கு முன் பற்றுக்கோடாக வேண்டியிருந்த அக் குறிகள் முதலியன இப்பொழுது தாமே வேண்டாவாய் நீங்கின. நீங்க அச் சிவபெருமானை அறிவுக்குள் விளங்கும் அறிவாய் வழிபடும் நெறி வெளிப்பட்டுப் புலனாம். புலனாகவே அம் மெய்ப்பொருளைப் பற்றறப் பற்றப் பயிலுதல் வேண்டும். அங்ஙனம் பயிலப் பயில மெய்ப்பொருள் நிலையே வாய்க்கும். அத்தகைய மெய்ந்நெறியில் பயிலும் பேறில்லாதார் அம் மெய்ப்பொருள் நிலையினை எய்தார். அந் நிலை எய்தாமையினால் அவர்க்குப் பாசமும் பற்றும் ஒரு சிறிதும் அறாவென்க. பற்றறப் பற்றுதல் நிராதார வழிபாடு. பற்றறப் பற்ற என்பதற்குப் பண்டேபற்றிய பற்று அறப் பற்ற என்றலும் ஒன்று. தபோதனர்: குறிப்புமொழியாய்த் தவத்தோரல்லாதாரைக் குறித்தது. (அ. சி.) பயிலா - அடையாத; பயிற்சி செய்யாத. (6) 2236. ஆயும்பொய்ம் மாயை1 யகம்புற மாய்நிற்கும் வாயு மனமுங் கடந்த மயக்கறின் தூய அறிவு சிவானந்த மாகிப்போய் வேயும் பொருளாய் விளைந்தது தானன்றே. (ப. இ.) உண்மை யாராயுமுன் நிலைப்பதுபோன்று காணப்படும் இவ் வுலகமும் உலகவாழ்வும் அகம்புறமாகக் காணப்படும் பொய்மாயை என்க. பொய் : நிலையாதது. இதனையே திருவள்ளுவநாயனார் "நில்லாதவற்றை நிலையின என்றுணரும், புல்லறி வான்மை கடை" (331) என்றருளினர். அவற்றால் கொண்ட மருளின் எல்லையினைச் சொல்லவும் நினைக்கவும் ஒல்லாது. மருள் - மாயை. அத்தகைய மாயையின் மயக்கம் திருவருளால் அறுதல் வேண்டும். அற்றால் தூய சிவவுண்மையறிவு தோன்றும். அவ் வறிவு தோன்றவே சிவப்பேரின்பம் நிலைக்கும். நிலைக்கவே சிவபெருமான் எங்குமாய் நிற்கும் பரந்த நிலையுடன் நின்று சிவவிளைவாய்த் திகழ்வர். (அ. சி.) பொய் - மறைந்துள்ள மாயை வேயும் - எங்கும் பரந்துள்ள. (7) 2237. துரியப் பரியில் இருந்தஅச் சீவனைப் பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு நரிகளை யோடத் துரத்திய நாதர்க்கு உரிய வினைகள்நின் றோலமிட் 2டன்றே.
1. நில்லாவாழ்வு, அப்பர், 5. 69 - 7. 2. படைக்கல. அப்பர், 4. 81 - 8.
|