(அ. சி.) பகிர் - புற. பேதித்த - மாறுபட்ட பூமி. பொறி ஒளி - கண்ணொளி. (1) 2259. ஆனந்த தத்துவம் அண்டா சனத்தின்மேல் மேனிஐந் தாக வியாத்தமுப் பத்தாறாய்த் தானந்த மில்லாத தத்துவ மானவை ஈனமி லாஅண்டத் தென்மடங் காகுமே. (ப. இ.) இயற்கை உண்மை அறிவின்ப வடிவினனாகிய சிவபெருமான் அண்டத் திருக்கைமேல் அமர்ந்துள்ளனன். அவன், அத்தன், அன்னை, அருளோன், ஆண்டான், ஆசான் என்னும் ஐவேறு பொதுவடிவங்கொண்டு ஆருயிர்கட்கு வேண்டுவ புரிந்தருள்கின்றனன். முப்பத்தாறு மெய்களுக்கும் அப்பாற்பட்டு அழிவில்லாது நிற்பவனும் அவனே. இத் தத்துவங்கள் அளவில்லாத அண்டங்களின் எண்ணிக்கையினும் எட்டுமடங்கிலுங் கூடுதலாகும். திருமேனி ஐந்துகொண்டு தோற்றம் அளிப்பினும் அவன் எங்கணும் நீக்கமற நிறைந்துநிற்கும் நிலையிலும் பிரிவின்றி நிற்பன். வியாத்தம் - பரப்பு, செறிவு, வியாபகம். (அ. சி) அண்டாசனம் - அண்டக் கூட்டங்களாகிற ஆசனம். (2) பதினொராந்தானமும் அவத்தையெனக்காணல் 2260. அஞ்சில் அமுதுமோ ரேழின்கண் ஆனந்த முஞ்சிலோங் காரமோ ரொன்பான் பதினொன்றில் வஞ்சக மேநின்று வைத்திடிற் காயமாங் கிஞ்சுகச் செவ்வாய்க் கிளிமொழி கேளே. (ப. இ.) உயிர்க்கு ஒருநாளும் அழிவின்றி நிலைத்திருக்கும்படி செய்யும் இயல்பு வாய்ந்தது எது? அஃது அமிழ்து. விண்ணவர் உண்ட அமழ்தம் மண்ணவரைவிடச் சிலநாட்கள் நீடித்திருக்கும்படி செய்யும் நீர்மைத்து ஆனால் தூமாயையின்கண் பெறப்படும் சிவமெய், என்றும் அழியா இன்ப நிலைப்பினைத் தருவது. அதனால் அச் சிவனே சாவாமருந்தாவன். சாவாமருந்து - அமிழ்து. சிவமெய் - சிவதத்துவம். இஃது தூமாயையின் ஐந்து நிலைகளில் ஒடுக்கமுறை ஈற்றில் காணப்படுவது. இதுவே தோற்றமுறையில் முதலாவதாகும். இம் மெய் ஐந்தும் உணர்த்துமெய் என்று கூறப்படும். உணர்வுமெய் ஏழில் இறுதியாகக் காணப்படும் தூவாமாயை - மருள் இன்ப நிலையாகும். முஞ்சுதலாகிய அழிவில்லாத ஓங்காரம் மூன்று எழுத்துக்களைக்கொண்டதாகும். மூன்றாவன, அ + உ + ம் என்பன. இவற்றுடன் உடல்மெய் என்றதன்கண் காணப்படும் இருபது மெய்களுடன் ஓங்காரம் மூன்றும் சேர்ந்து இருபத்து மூன்று. இஃது ஆங்காரமெய்யாகும். பிறக்கும் பெற்றிவாய்ந்த ஆருயிர்கட்கு உடல்மெய் அவ்வாங்காரி (1049) பெற்ற பெண்பிள்ளையாகும். முள்முருக்கின் பூவிதழ் போன்ற செவ்விய இதழை உடைய பெண் பிள்ளையே கேட்பாயாக. சிஞ்சுகம் - முண்முருக்கு. (அ. சி.) அஞ்சில் அமுது - சிவ தத்துவங்களின் ஈறாய சிவம். ஏழின்கண் ஆனந்தம் - வித்தியா தத்துவங்களின் ஈறாய மாயை. முஞ்சில் - அழிவில்லாத. ஓங்காரம், ஓரொன்பான், பதினொன்றில் - ஓங்காரம் மூன்று ஆக 23-வது தத்துவமாகிய அகங்காரம். (1)
|