918
 

(அ. சி.) அங்கி - உருத்திரன். மேலஞ்சு - நிராதாரத்தில் உள்ள ஐந்து மூர்த்திகள் - அஃதாவது ஆதார ஐந்து மூர்த்திகளை இயக்கும் மூர்த்திகள்.

(2)

2267. ஆன்மாவே தான்மைந்த னாயினன் என்பது
தான்மா மறையறை தன்மை யறிகிலர்
ஆன்மாவே மைந்தன் அரனுக் கிவனென்றல்
ஆன்மாவும் இல்லையால் ஐயைந்தும் 1இல்லையே.

(ப. இ.) சிவபெருமானின் திருவடிப் பேரின்பப் பெருவாழ்வு அனைத்தையும் தனதாகக்கொண்டு நுகரும் உரிமை ஆருயிர்களுக்கே உள்ளது. அம் முறையால் ஆருயிர் மைந்தன் என ஓதப்பெற்றது. இவ்வுண்மையினைச் செந்தமிழ்த் திருமறை, திருமுறைகள் கிளந்தெடுத்து ஓதுகின்றன. மறை - வேதம். முறை - ஆகமம். இதனைப் பலர் அறிகிலர். ஆருயிரே பேருயிராகிய அரனுக்க மைந்தனாவன். உடன்மெய் இருபத்து நான்கும் ஆள் ஒன்றும் ஆக இருபத்தைந்தும் சார்ந்த இடத்து ஆருயிர் என்னும் பெயருண்டு. கடவுளைச் சார்ந்த இடத்து ஆருயிர். பேருயிர் என்னும் பெயர்களின்றி 'அடிமை' என்னும் பெயருண்டாகும். இம் முறையில் உடல் நீங்கினவிடத்து ஆன்மா என்னும் பெயரில்லை என்னும் பொருளில் ஆன்மாவும் இல்லை என்று ஓதினர். இது தொழில் நீங்கினால் தொழில்பெயர் நீங்குவதன்றித் தொழில் புரிந்தவனும் நீங்குவதில்லை. இவ் வுண்மை 'தன்நாமங் கெட்டாள்' என்னும் திருமறையான் உணரலாம். நாமங் கெடுதலன்றி நாமிகெடுவதில்லை. ஆன்மா என்பது ஆகுபெயராகப் பெயரைக் குறித்தது. நாமி: நாமத்தையுடைய ஆவி.

(அ. சி.) மைந்தன் - சில ஆனந்தத்தை அடைய உரிமையுடையவன்.

(3)

2268. உதய மழுங்கல் ஒடுங்கலிம் மூன்றின்
கதிசாக் கிரங்கன வாதி சுழுத்தி
பதிதரு சேதனன் பற்றாந் துரியத்து
அதிசுப னாவனந் தானந்தி 2யாமே.

(ப. இ.) ஆருயிர் உடலுடன் கூடித் தொழிற்படுவது தோற்றமாகிய உதயமாகும். இது நனவு. மழுங்கலாகிய குறைவு தொழிற் குறைபாடாகும். இது கனவு. ஒடுங்குதல் கருவிகள் ஒடுங்கித் தொழிலின்மையாகும். இஃது உறக்கம். சிவபெருமான் திருவடி நினைவு அகலாதிருத்தலே சிவனடியில் சேர்தல் என்ப. அதுவே ஈண்டுப் பதிதருதல் என ஓதப்பட்டது. சேதனன்: அறிவுடையவன்; ஆருயிர். சிவன் நினைவுடைய ஆருயிர் துரியமாகிய மேல்நிலையைப் பற்றும். அந்நிலையில் திருவருளால் மேல்நிலைக்கு உரிய முதல்வன் ஆவன். ஆண்டுள்ள மாறிலா மாறாத் திருவடியின்பத்துள் மூழ்கி இன்பவடிவாகவே ஆருயிர் என்றும் இருக்கும். நந்தான் - கெடான்.

(அ. சி.) சேதனன் - ஆன்மா.

(4)


1. மன்னவன்றன், சிவஞானசித்தியார், 8.

2. பொன்வாள். சிவஞானபோதம், 11. 2 - 4.