யுண்டு; ஞாயிறுண்டு; அவற்றை இயக்குந் தெய்வங்களாகிய அயன், அரி, அரன், ஆண்டான், அருளோன் என்பவரும் உளர். ஐம்பூத நிலையை முறையே மூலம், மேல்வயிறு, நெஞ்சம், கழுத்து, உச்சித்துளை என்ப. ஞாயிற்று மண்டிலத்தை அடிப்குதியிலும், திங்கள்மண்டிலத்தைப் புருவநடுவிலும் கூறுப. (அ. சி.) இத் திருமந்திரம் அண்டத்தில் உள்ளவை பிண்டத்தில் உண்டு என்று கூறுகிறது. (12) 2277. ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவென்னும் ஞானத் திரியைக் கொளுவி அதனுட்புக்கு ஊனை யிருளற நோக்கும் ஒருவற்கு வானக மேற வழியெளி 1தாகுமே. (ப. இ.) மெய், வாய், கண், மூக்குச் செவியென்னும் ஐம்புலன்களாகிய யானைகளைத் திருவருள் நினைவால் அடக்கி உயிரெனும் திரியைத் திருவடியுணர்வெனும் தீயாற் கொளுத்தி உன்னற்குரிய ஊனாகிய சிவபெருமானை அவனருளால் இருளற இடையறாது நோக்கும் பெரும்பேறெய்தினார் ஒருவர்க்குச் சிவவுலகம் ஏறி இன்புறும் வழி எளிதாகும். உன்னுதல் என்னும் தொழிற்பெயர். உன்னப்படும் பொருளாகிய சிவபெருமானைக் குறித்தது - ஆகுபெயர். உன்னுதல் என்னும் தொழிற்பெயர் முதனிலைத் தொழிற்பெயராகுங்கால் உன் என்று ஆகும். அது முதல் நீண்டுகொள்ளுதல் கோள் என்றாவதுபோல் ஊன் என்று ஆயிற்று. (அ. சி.) ஆனைகள் ஐந்து - பொறிகள் ஐந்து. ஊனை - சிவனை. வானகம் - ஆஞ்ஞைத்தானம். (13) 2278. ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவந் தாடித் தெழுந்த தமருக ஓசையும் பாடி யெழுகின்ற வேதா கமங்களும் நாடியி னுள்ளாக நான்கண்ட வாறே. (ப. இ.) ஆருயிர்களின் நெஞ்சகத்து நின்று அம்பலவாணன் செம்மைபெறத் திருக்கூத்து இடையறாது புரிந்தருளுகின்றனன். அவன் திருவடி ஆடியகால் என்று சொல்லப்படும். அதனால் அசைக்கப் பெறுகின்றது உயிர்ப்பு. அவ் வுயிர்ப்பினை நடுநாடிவழியாகச் செலுத்தி நிற்பார்க்குத் திருமறைத் திருமுறைகள் தோன்றுதற்கு வாயிலாம் வலக்கை உடுக்கைஒலி நலமுறக் கேட்கும். அவ் வொலி பருத்து எழும். 'தாடித்தெழுந்த தமருக ஆசை' என ஓதினர். தடித்தல்: தாடித்தென்று முதனீண்டது. புகழ் நூலும் பொருள் நூல்களுமாகத் தோன்றும் வேதாகமங்களும் உண்டாம். நடுநாடியின் முடிவிடமாம் உச்சித்துளை வழியாக இவையனைத்தும் என்னகத்தே கண்டுள்ளேன். (அ. சி.) அசைக்கின்ற வாயு - சிலம்பொலி. தாடித்து - மிகுத்து (தடித்து). நாடி - சுழுமுனை. (14)
1. உடம்பெனும். அப்பர், 4. 75 - 4.
|