2287. ஆனந்த மாகும் அரனருட் சத்தியில் தானந்த மாமுயிர் தானே சமாதிசெய்து ஊனந்த மாயுணர் வாயுள் ளுணர்வுறிற் கோனந்தம் வாய்க்க மகாவாக் 1கியமாமே. (ப. இ.) பேரின்பப் பெருவாழ்வாம் ஆனந்தமாவது அரனருள் ஆற்றல் என்ப. அவ் வின்பம் எய்திய ஆருயிர் தானே செயலற்றிருக்கும் சமாதி எய்தும். ஊன் எனப்படும் உடலின் முடிவு தோன்றி யொடுங்கும் ஆக்கப் பொருள் அறிவில்லது, அதன் முதல் அழிவில்லது என வுணர்த்தும் அருள்வழி உயிர் உணரும். உணர்ந்து உணர்த்துகின்ற அறிவையும் உணரும். உணர்ந்தால் கோனாகிய சிவபெருமானின் திருவடிப்பேரின்பம் வாய்க்கும். இவ் வுண்மையனைத்தும் பெரும் பொருட்கிளவியாகிய திருவைந்தெழுத்தால் உண்டாம். பெரும்பொருட்கிளவி - மகாவாக்கியம். (அ. சி.) கோனந்தம் - சிவத்தின் தன்மை. மகாவாக்கியம் - பெரும் பெயர். (23) 2288. அறிவிக்க வேண்டாம் அறிவற் றயர்வோர்க்கும் அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும் அறிவுற் றறியாமை யெய்திநிற் போர்க்கே அறிவிக்கத் தம்மறி வாரறி 2வோரே. (ப. இ.) அறிவு ஒருசறிதும் இன்றிக் கண்டதே காட்சி கொண்டதே கோலமாய் வந்த வரவையும், தந்த உறவையும், முந்தப்போம் நெறியையும் முற்றாக மறந்து மாவெனத் திரியும் கயவர்க்கும், சிறந்த திருமுறை நூற்களால் உண்மை உணர்த்தல் வேண்டுவதின்று. பேரறிவுப் பெரும் பொருளாம் சிவபெருமானுடன் ஓரறிவாய்த் திகழும் நிறைவினையுடைய ஒண்மை யோர்க்கும் மெய்யுணர்வு நூல்கள் வேண்டுவதில்லை. அறிவினைப் பொருந்தி அறியாமை வயப்பட்டிருக்கின்றோமே என்று பெருங்கவலை கொண்டு ஒருங்கிய மனத்தராய் உயர்வழி நாடுவார்க்கே மெய்யுணர்வு நூல்கள் வேண்டும் என்க. உயர்வழியாவது யாண்டும் எத்தகைய உருவுடனும் கூடும் பிறப்பு எஞ்ஞான்றும் துன்பம் என்பதும், நத்தும் சிவபெருமான் திருவுடன் கூடும் சிறப்பு எஞ்ஞான்றும் பொன்றா இன்பம் என்பதும் அருளால் அறிதல். அறிந்து அதனை எய்துதற்கு நன்னெறி நான்மை நற்றவம்புரிதல். இத்தகைய வேட்கையுடையோர்க்கு மெய்கண்ட நூல்களை அறிவித்தல்வேண்டும். அவர்கள் தம்மறிவால் அறியும் அறிவுடையோராவர். இவ் வுண்மை சிவஞானசித்தியார் பரபக்கத்தின்கண் காணப்படும் "போதமிகுத் தோர்" என்னும் திருப்பாட்டானும் உணரலாம். மேலும், "எமக்கென் எவனுக் கெவை தெரியும் அவ்வத் தமக்கவனை வேண்டத் தவிர்" (46) என்னும் திருவருட் பயனாலும் இவ்வுண்மை உணரலாம். (24)
1. கரும்பினு. அப்பர், 4. 74 - 3. 2. சிவம் என்னும். சிவஞானபோதம், 12. 4 - 4. " போதமிகுத். சிவஞானசித்தியார், நூல். " பண்டைநற். " நுதலிய.
|