2303. ஆதித்தன் தோன்ற வரும்பது மாதிகள் பேதித்த தவ்வினை யாற்செயல் சேதிப்ப ஆதித்தன் றன்கதி ராலவை சேட்டிப்பப் பேதித்துப் பேதியா வாறருட் 1பேதமே. (ப. இ.) ஞாயிறு கீழ்பால் தோன்றத் தாமரை முதலிய நீர்ப் பூக்கள் ஒன்று மலரும்; மற்றொன்று மலர்தற்குத் தகுதியாம் முகையாகும்; வேறொன்று உலரும் இச் செயல்கள் பூக்களின்கண் காணப்படினும் அப் பூக்கள் தம்மால்மட்டும் நிகழ்வனவல்ல. ஞாயிற்றின் கதிர்க்் கலப்பும் இயைந்துள்ளதாற்றான் நிகழ்கின்றன. அதுபோல் திருவருட் கலப்பால் அவன் அவள் அது என்னும் மூவகை யுலகமும் தோன்றிநின்று அழிகின்றன. இதுபோல் நிலைபேறாகத் தோன்றும் உலகங்களும் அழியும். இவற்றை வேறுபடச் செய்வதற்கு வேண்டிய காரணங்கள் இவற்றின்கண் உண்டெனினும் இவற்றையியக்கும் திருவருள் வேறுபாட்டானாம் என்பதே துணிபு. அழியும் - ஒடுங்கும். (அ. சி.) பதுமாதி - தாமரை நீலோற்பலம் முதலியன. பேதித்தது - மலர்தல். குவிதல். சேட்டிப்ப - இயங்க. அருள் பேதம் - திருவருளின் வேற்றுமைத் திறம். (39) 2304. பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும் போதம் புணர்போதம் போதமும் நாதமும் நாத முடனாத நாதாதி நாதமும் ஆதன் அருளின் அருளிச்சை யாமே. (ப. இ.) ஆருயிர்கட்கு உடல் உலகுகளுடன் ஏற்படும் ஒற்றுமை, வேற்றுமை, பிறழ்வு எனப்படும் பேதம், அபேதம், பேதாபேதம் ஆகிய வேறுபாடுகளும் திருவருளின் திருவுள்ளத்தான் ஆவன. அதுபோல் அவ்வுயிர்களுக்குரிய இயற்கையறிவும், அவ் வறிவின் விளக்கத் துணையாம் கல்வி முதலிய செயற்கையறிவும், இவற்றான் ஏற்படும் அறிவின் வளர்ச்சியும், அவ் வறிவிற்குத் துணையாம் ஓசையாகிய நாதமும், இந் நாதத்தைத் தொழிற்படுத்தும் அருளொலியாம் பரநாதமும் திருவருளின் திருவுள்ளத்தான் ஆவனவே. திருவுள்ளம் - திருவருள் இச்சை. இவையெல்லாம் ஆதன் என்று சொல்லப்படும் ஆருயிரின் பொருட்டேயாம். பிறழ்வு - பேதாபேதம். (அ. சி.) ஆதன் - ஆன்மா. (40) 2305. மேவிய பொய்க்கரி யாட்டும் வினையெனப் பாவிய பூதங்கொண் டாட்டிப் படைப்பாதி பூவியல் கூட்டத்தாற் போதம் புரிந்தருள் ஆவியை நாட்டும் அரனரு 2ளாமே.
1. நெல்லிற். சிவஞானபோதம், 2. 2 - 3. " தோற்றுவித். சிவஞானசித்தியார். 1. 2 - 5. " கந்தமலர். சிவப்பிரகாசம், பொது, 5. தெருளுமா. அப்பர், 4. 26 - 4.
|