"பொய்கொலை களவே காமம் பொருணசை இவ்வகை ஐந்தும் அடக்கிய தியமம்." "பெற்றதற் குவத்தல் பிழம்புநனி வெறுத்தல் கற்பன கற்றல் கழிகடுந் தூய்மை பூசனைப் பெரும்பய மாசாற் களித்தலொடு நயனுடை மரபின் நியமம் ஐந்தே." (தொல். பொருள். புறத். 20. மேற்கோள்.) (அ. சி.) பாடுற - அருகிற் சேர. (7) 2336. கொள்கையி லான கலாந்தங் குறிக்கொள்ளில் விள்கையி லான நிவிர்த்தாதி மேதாதிக்கு உள்ளன வாம்விந்து வுள்ளே யொடுங்கலுந் தெள்ளி யதனைத் தெளிதலு மாமே. (ப. இ.) குறிக்கொள்ளத்தக்கதான கலாந்தத்தைச் சொல்லுமிடத்து நீக்கல் முதலிய ஐந்து கலைகளும், கொழுப்பு முதலிய எழுவகைப் பொருள்களும் மாயையின்கண் ஒடுங்கும். அங்ஙனம் ஒடுங்கு முறைமையினை ஆய்தலும், ஆய்ந்து தெளிதலும் கலாந்தமாகும். கலைகள் ஐந்து: நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல், அப்பாலாக்கல் என்ப. பொருள்கள் ஏழு: சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, எலும்பு, மூளை, வெண்ணீர் என்ப. ஏழு பொருள்கள் - சப்ததாதுக்கள். (அ. சி.) நிவிர்த்தாதி - நிவிர்த்திகலை முதலிய ஐந்து கலைகள். மேதை - மூளைச்சத்து, இது எழுவகைத் தாதுவில் ஒன்று. (8) 2337. தெளியு மிவையன்றித் தேரைங் கலைவேறு ஒளியுள் அமைத்துள்ள தோரவல் லார்கட்கு அளியவ னாகிய மந்திரந் தந்திரந் தெளிவுப தேச ஞானத்தொ டைந்தாமே. (ப. இ.) மேலோதியவாறு கலாந்தம் தெளிவதல்லாமல் வேறுமொரு வகையாற் குறிப்பதுமுண்டு. அந்தம் நீக்கல் முதலிய கலைகளைந்தினையும் சிறப்பாகிய திருவருள் ஒளியுள் அமைத்தல் வேண்டும். அங்ஙனம் அமைத்து ஓரவல்லார்கட்குச் சிவபெருமான் அளவில் பேரருள்புரிகின்றனன். அவை: மந்திரம், தந்திரம், தெளிவு, உபதேசம், ஞானம் என ஐந்தாகும். இவ் வைந்தினையும் அருளே மறைமுறை ஆசான்சொல் மெய்ம்மை, தருமுணர்விவ் வைங்கலையந்தம் என்ப. (அ. சி.) ஐந்து - கலை, மந்திரம், தந்திரம், உபதேசம், ஞானம். (9) 2338. ஆகும் அனாதி கலையா கமவேதம் ஆகுமத் தந்திர மந்நூல் வழிநிற்றல் ஆகு மனாதி யுடலல்லா மந்திரம் ஆகுஞ் சிவபோ தகம்உப தேசமே.
|