4. இளமை நிலையாமை 221. கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர் குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில் விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே. (ப. இ.) நாள்தொறும் கிழக்கே தோன்கின்ற பகலவன் மெல்ல மெல்ல உச்சிக்கு ஏறிவந்து அதுபோலவே கீழிறங்கி மேற்கே மறைகின்றனன். இங்ஙனம் மறைவதை ஒவ்வொரு நாளும் பார்த்திருந்தும் அகக் கண்ணாகிய திருவடியுணர்விலார் தமக்கும் இந் நிலைமை வரும் என்று எண்ணார். இளங்கன்றானது ஆண்டுகள் செல்லச் செல்ல முதிர்ந்து சில ஆண்டுகளில் எருதாய் ஆகின்றது. பின் இறந்து படுகின்றது. அவர்கள் இவ்வுண்மையினையும் கண்டு தெளியார். இச் செய்யுள் ஒட்டணியாகும். பகலவன் நின்றாங்கு நிற்ப நில உருண்டை அப் பகலவனைச் சூழ்ந்து உருண்டு வருகின்றது. அதனால் பகலவன் எழுந்து மறைவதுபோல் காணப்படுகின்றது. கீழும் மேலுமாகச் சுழன்று வரும் இராட்டையில் நாம் ஏறியிருந்து ஒரு பக்கம் ஓரிடத்து ஒரு பொருளைக் குறிப்பாக வைப்பித்து அதனை நோக்கிக் கொண்டே வந்தால் நாம் மேலே இருக்கும் போது அது கீழிருப்பதாகத் தோன்றும். நாம் அதன் வழிக் கீழ் வர வர அப் பொருள் மேலெழுவதாய்த் தோன்றும். நாம் அதன் கீழ்ப்பக்கஞ் செல்ல அது முற்றாக மறைந்துவிடும். இவ்வொப்பினால் அவ்வுண்மை அறியலாம். விழியிலா மாந்தர் - திருவடி யுணர்விலாத மக்கள். (1) 222. ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப் பூண்டுகொண் டாரும் புகுந்தறி வார்இல்லை நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினுந் தூண்டு விளக்கின் சுடரறி1 யாரே. (ப. இ.) உலக மாந்தர் பிறந்து ஆண்டுகள் பலவுங் கடந்தன. அப்படியிருந்தும் அப்பனாகிய சிவபெருமானை அவனருளால் யாரும் இடையறாது நினைவதாகிய அகந்தழுவுதலைச் செய்திலர். அகந்தழுவுவாரே பூண்டு கொண்டாரெனப்படுவர். அவன் திருவடியுணர்வால் அவனுடன் புணர்ந்து அவனுள் அடங்கி அவன் திருவடிப் பேரின்பத்தினை நுகர்ந்தறிவாரும் இலர். சித்தி முதலியவற்றால் வாழ்வுக்குரிய காலங்கள் மிக நீண்டு கொடுத்தாலும் ஆருயிரின் அன்பறிவு ஆற்றல் மூன்றனையும் ஆண்டவனுடைய அன்பறி ஆற்றல்கள் மூன்றும் கலந்து தூண்டினாலன்றித் தொழிற்படா. அதனால் சிவபெருமான் தூண்டு விளக்கு எனப்படுகின்றனன். அத்தகைய தூண்டு விளக்கின் சுடரினை அச் சித்தர்களும் அறியார். நீண்டன காலங்கள்: நீண்டனவாகிய காலங்கள்; பண்புத் தொகை. (2)
1. தூண்டு " 6. 23 - 1.
|