படும் காண்போனும், காண்டற்குரிய ஞானமாகிய அறிவும் சிவன் திருவடிக்கீழ் ஒருங்கு ஒடுங்கும். ஒடுங்கவே தெளிந்த முன்மை யுணர்வாம் மோனம் கைகூடும். இதுவே சிவானந்த வுண்மையாகும். ஆனந்தம். ஆதற்குப் பொருந்தும் பேரின்பம். நீருள் மூழ்குவோனுக்கு வேறாக இருக்குங்கால் அந் நீரைப் பற்றிய நினைப்பும் உணர்வும் முனைப்பது போன்று நீருள் மூழ்குங்கால் தோன்றாமைபோல் மெய்யடியார்களுக்கும் சிவத்துடன் நிற்குங்கால் காட்சி காண்போன் முதலியன தோன்றா தடங்கும். (13) 2342. உண்மைக் கலையாறோ ரைந்தான் அடங்கிடும் உண்மைக் கலாந்தம் இரண்டைந்தோ டேழந்தம் உண்மைக் கலையொன்றில் ஈறாய நாதாந்தத்து உண்மைக் கலைசொல்ல வோரந்த மாகுமே. (ப. இ.) மெய்ம்மைக் கலை பதினொன்று ஆகும். கலாந்தம் பதினேழாகும். உண்மையான கலையின்கண் முற்றுற நிற்பது நாதாந்தமாகும். இத் திருவருட் கலைகளைச் சிவகுரு அருளிச் செய்ய ஒப்பில் ஒரு முடிபாகும். (14) 2343. ஆவுடை யாளை யரன்வந்து கொண்டபின் தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாடந்து வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக் கூவி யருளிய கோனைக் கருதுமே. (ப. இ.) ஆவாகிய ஆருயிர்களை உடைமைப் பொருளாக் கொள்ளுங்கால் அவ் வுயிர் அருளுயிராகும். இதனால் திருவருளம்மை ஆவுடையாள் எனப்படுவள். சிவபெருமானாகிய அரன் எழுந்தருளி வந்து ஆவுடையாளைத் தன்னகத்து அடக்கிக்கொள்ளுவன். அங்ஙனம் கொண்ட பின், தேவர்களையும் உடைமைப் பொருள்களாகக் கொண்டருள்பவன் சிவன். அவன் எங்கள் சீர்நந்தி ஆவன். அதன்பின் சிவகுருவாக எழுந்தருளிவந்து திருவடி சூட்டியருளினன். என்றும் பொன்றா நிலைபேறுடைய வேதாந்த சித்தாந்த மேன்மையினை வலிய வந்து ஆண்ட வள்ளல் கூவியழைத்துக் கூறியருளினன். அத்தகைய முழுமுதல்வனை இடையறாது எழிலுள்ளத்து எண்ணுவோமாக. சிவபெருமான் வந்து ஆட்கொண்டபின் ஆவுடையாளைக் கூவி வேதாந்த சித்தாந்த உண்மைகளை அருளிச் செய்யும் பொருட்டு அருளினன் என்றலும் ஒன்று. அருளிய - அருளிச் செய்யும் பொருட்டு; செய்யிய என்னும் வாய்ப்பாட்டு வினைஎச்சம். (15) 2344. கருது மவர்தங் கருத்தினுக் கொப்ப அரனுரை செய்தருள் ஆகமந் தன்னில் வருசம யப்புற மாயைமா மாயை உருவிய வேதாந்த சித்தாந்த 1வுண்மையே.
1. மொய்தரு. சிவஞானசித்தியார், 2. 4 - 1.
|