2376. படைப்பாதி யாவது பரஞ்சிவஞ் சத்தி இடைப்பால் உயிர்கட் கடைத்திவை தூங்கல் படைப்பாதி சூக்கத்தைத் தற்பரஞ் செய்யப் படைப்பாதி தூய மலமப் பரத்தே. (ப. இ.) ஆருயிர்கட்கு உடல் கலன் உலகு ஊண் முதலியவற்றைப் படைத்தருள வேண்டுமென்று தொன்மைக்கண் திருவுள்ளங்கொண்டது முழுமுதற் பெரும்பொருளாம் சிவம் ஆகும். அச் சிவன் வைப்பாற்றலாகிய மாயையினின்று இவற்றைப் படைத்து உயிர்கட்கு அளித்துக் காத்தருள்கின்றனன். சத்தி - வைப்பாற்றல். தூங்கல் - நிகழ்தல். படைப்பு முதலாகிய ஐந்தொழிலும் மிக நுண்தன்மை வாய்ந்ததாகும். நுண்மை: கருவியின்றிக் கருத்தாலியற்றுவிக்கும் கடவுட்செயல். நுண்மை - சூக்கம். அந் நுண்டொழிலைச் சிவபெருமான் செய்தருளுவதனால் ஆருயிர்கள் மலப்பிணிப்பினின்றும் விடுபடுகின்றன. விடுபடவே தூய்மை எய்துகின்றன. தூய்மை எய்துவதால் அச் சிவபெருமான் திருவடிநீழலை அவ் வுயிர்கள் எய்துகின்றன. தூயமலமப்பரத்தே: மலநீங்கிய ஆருயிர் தூயவாய் அப் பரத்தேயாம் எனக்கொள்க. (அ. சி.) இடைப்பால் - திதி காலத்தில், அஃதாவது காத்தற் காலத்தில். தூங்கல் - நிகழுதல். (11) 2377. ஆகிய சூக்கத்தை யவ்விந்து நாதமும் ஆகிய சத்தி சிவபர மேலைந்தால் ஆகிய சூக்கத்தில் ஐங்கரு மஞ்செய்வோன் ஆகிய தூயவீ சானனு மாகுமே. (ப. இ.) நுண்ணிய ஐந்தொழிலை விந்து, நாதம், சத்தி, சிவம், பரம் என்னும் மேல் ஐந்து நிலைகளாலும் ஆக்குவிப்பன். அந் நுண்ணிய ஐந்தொழிலை அருளால் ஆக்குவிப்போன் தூய இயக்க முதலாகிய ஈசானன் ஆவன். (அ. சி.) மேலைந்து - விந்து, நாதம், சத்தி, சிவம், பரம். (12) 2378. மேவும் பரசிவ மேற்சத்தி நாதமும் மேவும் பரவிந்து ஐம்முகன் வேறீசன் மேவும் உருத்திரன் மால்வேதா மேதினி ஆகும் படிபடைப் போனர 1னாகுமே. (ப. இ.) இப் படைப்பாதி ஐந்தொழிலையும் சிவபெருமான் அருவம் நான்கு, அருவுருவம் ஒன்று, உருவம் நான்கு ஆக ஒன்பான் நிலைகளின் நின்று உன்முகமாகிய கருத்தால் இயற்றியருளுகின்றனன் அந் நிலைகள் முறையே பரசிவம், பராசத்தி, பரநாதம், பரவிந்து எனவும்; ஐம்முகன் எனவும்; ஈசன், உருத்திரன், மால், அயன் எனவும் கூறப்படும். மாயாகாரியமாகிய உலகினைப் படைத்தருளுபவன் அரனாகிய சிவபெருமானாவன். (அ. சி.) ஐம்முகன் - சதாசிவன். (13)
1. சிவஞ்சத்தி. சிவஞானசித்தியார், 2. 4 - 2.
|