(ப. இ.) ஈண்டு இவன் என்பது ஆருயிரைக் குறிக்கும். அஃது அவன் இவன் ஆகின்றான் என்னும் மும்மொழிக்கண் பெறப்படும். அத்தகைய இவன் என்னும் சொல் சிறப்பாக சிவகுருவினைக் குறிப்பதாகும். அவன் என்னும் சொல் முழுமுதற் சிவனைக் குறிப்பதாகும். முழுமுதற் சிவனாகிய அவனுக்குச் சிவகுருவாகிய இவனுடைய நற்றவ உள்ளமே உற்று உறையும் வற்றா அருள்சேர் திருக்கோவில் என்க. அதுவல்லாமல் வேறு திருக்கோவில் சிவனுக்கு அங்கு இல்லை என்க. அங்ஙனமிருந்தும் அவனாகிய சிவனுக்குச் சிவகுருவின் உள்ளத்தையன்றி வேறோர் இல்லம் இருப்பதாக ஆராய்ந்து அறியப்புகின், வழியளவை நூலளவை நுண்ணுணர்வு முதலிய எல்லா வகையானும் பெறப்படுவது சிவகுருவின் திருவுள்ளம் என்பதேயாம். அவ்வுண்மையினை அவ்வாற்றான் அறிந்திருந்தும் அவனாகிய சிவபெருமானைச் சிவகுருவுக்கு வேறாகப் புறம்பு என்று சில்லோர் வீண்முழக்கம் செய்கின்றனர். உண்டா - உண்டாயிருப்பதாக. (அ. சி.) இவன் - சீவன்(ஈண்டுக் குரு); அவன் - சிவன். புறம்பு - வேறானவன். (2) 2603. நாடும் 1பெருந்துறை நான்கண்டு கொண்டபின் கூடுஞ் சிவனது கொய்மலர்ச் சேவடி தேட வரியன் சிறப்பிலி எம்மிறை ஓடும் உலகுயி ராகிநின் றானன்றே. (ப. இ.) நன்னேறி நான்மை நற்றவத்தோரால் நாடப்பெறும் 'மிகுசைவத்துறையே பெருந்துறையாகும். அத்துறையினைத் திருவருளால் நான் கண்டுகொண்டேன். அதன்பின் சிவபெருமானுடைய செம்மலர் நோன்றாள் சேர்ந்தின்புறும் பேறு கைகூடிற்று. சிறப்பிலி : சிறப்பு + இல் + இ = சிறப்பாகிய, இல் - சிவகுருவின் திருவுள்ளம், இ - உடைமையாகக்கொண்டு எழுந்தருளியிருப்பவன். இப் பொருள் பயப்பதே ஈண்டுச் சிறப்பிலியாகும். இ: ஒடைமைப் பொருள்ஈறு; வில்லையுடையவன் வில்லி என்பதுபோல். அத்தகைய சிறப்பிலியாகிய எம்மிறையைத் தேடவரியன் என்று செப்புவர். அச் சிவபெருமான் புடைபெயரும் உலகாகவும் உற்றுணரும் உயிராகவும் பிரிப்பின்றி நிறைந்து நின்றியக்குகின்றனன். (அ. சி.) பெருந்துறை சிவனது திருவடிதான் என்பது இம் மந்திரக் கருத்து. சிறப்பு இல் இ - சிறப்பினையுடையன் இல்லமாயிருக்கின்ற குரு. (3) 2604. இயம்புவன் ஆசனத் தோடு மலையும் இயம்புவன் சித்தக் குகையும் இடமும் இயம்புவன் ஆதாரத் தோடு வனமும் இயம்புவன் ஈரா றிருநிலத் தோர்க்கே. (ப. இ.) சிவபெருமான் ஆருயிர்கள் உய்தற்பொருட்டு ஆண்டாண்டு எழுந்தருளியிருக்கும் இருக்கையும் மலையும் இவை இவை என இயம்புவன்
1. வேதநெறி. 12. சம்பந்தர், 1. " பெரும்பெரு. 8. அடைக்கலப்பத்து, 3.
|