வான். அதுபோல் மெய்யுணர்வு எழாவண்ணம் அறிவினை அடக்கி ஆணவ முனைப்பாம் இருளினூடே மின்னொளி போன்று தோன்றிய புல்லறிவாளரும் பிறன்மனைவேட்டு மயலுறுவர். அத்தகைய பெண்டிரும் கற்பழிந்து பழிசேர் இழிகுலத்தவராவர். அறந்திறம்பிய செல்வமும் சிற்றினச் சார்பாம் புல்லறிவும் மருள் கொள்ளவும் மாதர் மயலுறவும் செய்யும் கருவிகளாகும்; இத்தகையோர் தாமாகவே மருள்கொண்ட சிந்தையை மாற்றிக் கொள்ளும் வன்மையிலாதவராவர். தெருளுறு நல்லோர் ஒருநாளும் இம் மருள் கொள்ளார். மருளுறும் நெஞ்சுடைய அல்லோர் மாற்ற முடியாது கொண்டு இருளுறு நெஞ்சினராய் இடர்ப்படுவர். இத்தகைய பெண்டிரையே நல்லோர் பழிப்பர். என்னை? ஆண் பெண் இருவரும் ஒருவருக்கொருவர் சிறப்புறும் வழிக்குத் துணையாதல் வேண்டும். அதுவே இறைவன் திருவுள்ளம். அதற்கு மாறாகப் பிறப்புறும் பழிக்குத் துணையாவதாலென்க. இவ்வுண்மை, 'மதனெனும் பாறைதாக்கி மறியும்' எனவும், 'கனியைநேர் துவர்வாயார் என்னுங்கால்' எனவும் முறையே அப்பர் பெருமானும் அருள்வாதவூரடிகளும் செப்பியருளினமையால் உணரலாம். (அ. சி.) கண்டன் - அரசன். (3)
9. மகளிர் இழிவு 247. இலைநல வாயினும் எட்டி பழுத்தால் குலைநல வாங்கனி கொண்டுண லாகா முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல் விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே. (ப. இ.) இலை தளிர் பூ காய் முதலியவற்றால் அழகினை உடையனவாய் எட்டிமரம் பழுத்துக் குலைகளில் கண்ணைக் கவரும் வனப்பாகிய நலமுடன் கனி காணப்பட்டாலும் பின் விளையும் இறப்பினை எண்ணி அக் கனியை எவரும் உண்ணார். அதுபோன்று கண்ணைக் கவரும் அழகிய முலையினையும், எண்ணத்தை ஈர்த்து மனத்திண்மையை மாய்க்கும் வாய்ப்புன்முறுவலையுங் கொண்டு தம்மையும் பிறரையும் செம்மை நெறி செல்லவொட்டாது கெடுக்கும் பொய்ம்மை மாதர் மேல் செல்லும் எண்ணத்தைக் கொடிதெனக் கொண்டு நன்னெறிச் செல்வீராக. (அ. சி.) இலைநலவாயினும் - பார்ப்பதற்கு இலையால் அழகுடையதேனும். விலகுறும் - செல்லும். வெய்து - கடிந்து. (1) 248. மனைபுகு வார்கள் மனைவியை நாடில் சுனைபுகு நீர்போற் சுழித்துடன் வாங்குங் கனவது போலக் கசிந்தெழும் இன்பம் நனவது போலவும் நாடவொண் ணாதே. (ப. இ.) கட்டிய மனைவிபால் முறையாக இன்பம் எய்துவார் நிலை சுனைநீர் மூழ்கி இன்புறுவாரோ டொக்கும். அவ் இன்பினைக் கனவிற் காணினும் நனவுபோல் நலன் பயப்பதாகும். தவறான மாதர்பால்
|