2721. கூத்தன் கலந்திடுங் கோல்வளை யாளொடுங் கூத்தன் கலந்திடுங் கோதிலா ஆனந்தங் கூத்தன் கலந்திடுங் கோதிலா ஞானத்துக் கூத்தனுங் கூத்தியுங் கூத்ததின் மேலன்றே. (ப. இ.) கூத்தனாகிய சிவபெருமான் அழகிய புள்ளிகளையுடைய வளையலை யணிந்து கிளையுற விளங்கும் திருவருள் அம்மையுடன் கலந்து ஆருயிர்கட்கு அளவிலாநலம் உளமொடும் புரிகின்றனன். அவன்தன் திருவருட்கலப்பால் குற்றமற்ற பேரின்பம் சீருறப் பெருகும். அவன் திருவடியுணர்வெனப்படும் குற்றமிலாத சிவஞான விளக்கமுண்டாகும். கூத்தனும் கூத்தியும் ஆகிய சிவனும் சிவையும் திருக்கூத்தின்மேல் திருநோக்கம் கொண்டருளுகின்றனர். (அ. சி.) கூத்தி - நடமாடும் சிவகாமி. (6) 2722. இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும் நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன் படங்கொடு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம் அடங்கலுந் தாமாய்நின் றாடுகின் றாரே. (ப. இ.) சிவபெருமானின் இடப்பாகத்தைத் தனக்கு இடமாகக் கொண்டு திகழ்பவள் திருவருளம்மையாகிய சத்தி. அவளுடன் விட்டுப் பிரிவின்றி இருவேறுருவின் ஒரு பேரியாக்கையாய் ஒட்டித் திகழ்பவன் சிவபெருமான். அவன் திருநடம்புரியும் சீரொடு நின்றமையை அவனருளால் அடியேனும் அறிந்துள்ளேன். படம்போலும் மறைப்பினைச் செய்யும் ஆணவ வல்லிருளைப் பொருந்தியுள்ள பலவேறு உயிர்கட்கெல்லாம் பேரறிவும் பேராற்றலும் பேரின்பும் என்றும் மாறாதியை தற்பொருட்டு அச் சிவபெருமான் அடங்கலும் தாமாகநின்று ஆடியருள்கின்றனன். ஆடுதல் - அனைத்தையும் புடைபெயர்விக்கத் திருவுள்ளங் கொள்ளுதல். படம் - துணி; திரைச்சீலை. (அ. சி.) இடங்கொண்ட - இடப்பாகம் கொண்ட. படங்கொடு - ஆணவமல மறைப்புக்கொண்டு. (7) 2723. சத்தி வடிவு சகல ஆனந்தமும் ஒத்தஆ னந்தம் உமையவள் மேனியாஞ் சத்தி வடிவு சகளத் தெழுந்திரண்டு ஒத்தஆ னந்தம் ஒருநட மாகுமே. (ப. இ.) எப்பொருளால் எவ்விடத்து எவ்வகை இன்பம் காணப்பெறினும் அவ்வனைத்தும் அருளாற்றலாம் சத்தியின் உரிமையே. அதனால் அனைத்தின்பமும் அருளாற்றலின் திருவடிவென்றனர். உண்மை அறிவு, இன்பம் என்னும் ஒப்பில் பொருள் மூன்றனுள் உடைமையாகிய உலகமும், உலகியற் பொருள்களும் அவற்றின் முதலாகிய மாயையும் உண்மை ஒன்றுமட்டும் உள்ளன. அடிமையாகிய ஆருயிர்கள் உண்மையும் அறிவும் உடையன. உடையானாகிய முழுமுதற்சிவன் உண்மையும், அறிவும், இன்பமும்
|