12. அன்புசெய்வாரை அறிவன் சிவன் 267. இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும் உகந்தருள் செய்திடும் உத்தம நாதன் கொழுந்தன்பு செய்தருள்1 கூரவல் லார்க்கு மகிழ்ந்தன்பு செய்யு மருளது வாமே. (ப. இ.) அன்பினைப் பொருட்படுத்தாமல் வன்னெஞ்சினராய்த் திரிவாரையும், அவ்வன்பினைப் பெற்று மென்னெஞ்சினராய் மேவி வாழ்வாரையும் சிவன் அறிந்து அவரவர் செய்கைகட்கு ஏற்றவாறு முறையே துன்ப இன்பங்களை அளிப்பன். அத்தகைய உகப்புடன் அருள்செய்யும் தலைமைசேர் முதல்வன். ஆருயிர்கள் முதற்கண் தொடர்புடையார்மாட்டு அன்புடையராய், அப் பயிற்சி மேலீட்டால் அனைத்துயிர்கள் மாட்டும் அருளுடையராய் ஒழுகவல்லார்க்கு மகிழ்ந்தன்பு செய்வன். அதுவே அவன் திருவருளுமாகும். இகழ்ந்தது - அன்பினைப் புறக்கணித்தது. பெற்றது - மெய்யன்புற்றது. (அ. சி.) கொழுந்தன்பு - வளரும் அன்பு. (1) 268. இன்பப் பிறவிக் கியல்வது செய்தவன் துன்பப் பிறவித் தொழில்பல என்னினும் அன்பிற் கலவிசெய் தாதிப் பிரான்வைத்த முன்பிப் பிறவி முடிவது தானே. (ப. இ.) இன்பப் பிறவி என்னும் பேரின்பத் தோற்றத்துக்கு வேண்டுவ அனைத்தினையும் அருளால் வகுத்தமைத்தவன். அப் பேரின்பத்தினை எய்துங் கருவியாகக் கொடுத்தருளிய இப்பிறவிக்கண் நேரும் துன்பம் பலவாகும். அதனைப் போக்குதற்குச் செய்யும் தொழிலும் பலவாகும். ஆயினும் அச் சிவபெருமான் திருவடிக்கண் நீங்கா அன்பு செய்து கலத்தல் வேண்டும். அங்ஙனம் கலப்பின் ஆதியாகிய அம்மையையுடைய சிவபெருமான் வைத்தளித்த திருவருள் வலிமையால் இப்பிறவியின்பமாக நிறைவெய்தும். இன்பப் பிறவி - பேரின்பத் தோற்றம் இயல்வது - தக்கது. முன்பு - வலிமை. (அ. சி.) இன்பப் பிறவி - முத்தியின்பம். (2) 269. அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி இன்புறு கண்ணியொ டேற்க இசைந்தன துன்புறு கண்ணியைந் தாடுந் துடக்கற்று நண்புறு சிந்தையை நாடுமின் நீரே. (ப. இ.) சிவபெருமானிடத்து இடையறாது அன்பு செய்து அதனால் நிறைந்த உள்ளத்தின்கண் அவன் திருவருட் பேரொளி
1. அருளென்னும். திருக்குறள், 757.
|