1185
 

2848. பத்துப் பரும்புலி யானை பதினைந்து
வித்தகர் ஐவர் வினோதகர் ஈரெண்மர்
அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்
அத்தலை ஐவர் அமர்ந்துநின் றாரன்றே.

(ப. இ.) பத்துநாடிகளும் பத்துப் பெரும்புலி எனப்பட்டன. பூதம் ஐந்து, பூதமுதலைந்து, புலனைந்து ஆகிய பதினைந்தும் யானை என்று உருவகிக்கப்பட்டன. பூதமுதல் - தன்மாத்திரை. புலன் - ஓசை முதலிய நுகரப்படும் பொருள்கள். அறிதற்கருவி ஐந்தும் வித்தகர் எனப்பட்டன. காற்றுக்கள் பத்தும் வினோதகர் எனப்பட்டன. ஈரெண்மர்: இரண்டு + எட்டு - இருவர் எண்மர் = பதின்மர். அமைதி, ஆற்றல், அபந்தல் என்னும் குணம் மூன்றும் மூவர் எனக் கூறப்பட்டது. பிறத்தல், கற்றல், தேடல், கூடல், வாழ்வு, தாழ்வு என்னும் அறுவகை நிலையினையும் மருத்துவராகக் கூறினர். அவ்விடத்து ஐம்பாடுகள் உண்டு. அவை நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல் என்பன. பத்துநாடிகள்: இடப்பால் நரம்பு, வலப்பால் நரம்பு, நடுநரம்பு, உள்நாக்கு நரம்பு, வலக்கண் நரம்பு, இடக்கண் நரம்பு, வலச் செவி நரம்பு, இடச்செவி நரம்பு, கருவாய் நரம்பு, எருவாய் நரம்பு, என்பன. இவற்றை முறையே இடைகலை. பிங்கலை, சுழுமுனை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குகு எனவும் கூறுப. காற்றுக்கள் பத்து: உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுகாற்று, தும்மற்காற்று, விழிக்காற்று, கொட்டாவிக்காற்று, இமைக்காற்று, வீங்கற்காற்று என்ப. இவற்றை முறையே, பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனவும் கூறுப.

(அ. சி.) பத்துப் பெரும்புலி - தசநாடி. யானை பதினைந்து - மண் முதலைந்து, சுவை முதலைந்து, வாக்காதி - ஐந்து. வித்தகர் ஐவர் - ஞானேந்திரியங்கள். வினோதகர் - உடலின்கண் ஊழியம் செய்பவர். ஈரெண்மர் - பத்து வாயுக்கள். மூவர் - முக்குணம். அறுவர் - பிறத்தல் முதலிய விகாரங்கள். அத்தலை - அவ் வுடம்பில். ஐவர் - ஐந்து அவஸ்தைகள்.

(23)

2849. இரண்டு கடாவுண்டு இவ்வூரி னுள்ளே
இரண்டு கடாவுக்கும் ஒன்றே 1தொழும்பன்
இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கில்
இரண்டு கடாவும் ஒருகடா வாமே.

(ப. இ.) இவ்வூராகிய உடம்பகத்து விடுத்தல் எடுத்தலாகிய உயிர்ப்புப் பயிற்சிக்குரிய இருதொழிலும் கடாக்கள் எனப்பட்டன. இவ்விரண்டினையும் மேய்த்து நடத்தும் உயிர் ஒன்றுண்டு. அவ்வுயிர் தொழும்பன் எனப்பட்டது. விடுத்தல் எடுத்தல்களாகிய மூச்சினை இருத்திப் பிடித்துத் தடுத்தலைச் செய்யின் அவ்விரண்டு கடாவும் ஒரு கடாவாகும். தடுத்தல் - கும்பகம்.

(அ. சி.) இரண்டு கடா - இரேசகம், பூரகம். இவ்வூர் - இவ் வுடம்பு. தொழும்பன் - சீவன். ஒருகடா - கும்பகம்.

(24)


1. கூடி. ஆரூரர், 7. 50 - 8.