1266
 

(ப. இ.) ஆருயிரின் உள்ளத்துள் நின்று ஓவாது இயங்கும் கேடில் உயிர்ப்பும் அவன் அருள் துணையால் இயங்குகின்றது. அதனால் அவ் வுயிர்ப்பும் சிவனே எனப்படும். வானத்தியங்கும் விரிந்த கதிர்களையுடைய பகலவனும் அவனே. பகலவன் - ஞாயிறு. மண்ணுலகினின்று ஒலித்தசைத்துத் திரட்டும் காற்றும் அவனே. ஆருயிர்களின் நெஞ்சகத்து நின்றியக்கும் கருத்தாகின்றவனும் அவனே.

(அ. சி.) கண்ணின்று - அன்பர் உள்ளத்தின்கண் இருந்து. கருத்தவன் - கருதும் பொருளவன்.

(14)

2996. எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப்
பண்ணுந் திறனும் படைத்த பரமனைக்
கண்ணிற் கவருங் கருத்தில் அதுவிது
உண்ணின் றுருக்கியோர் ஆயமு 1மாகுமே.

(ப. இ.) விழுமிய முழுமுதற் சிவபெருமானை இடையறாது எண்ணி ஈடேறுவதற்குரிய செந்தமிழ்த் திருமறை (2550) திருவைந்தெழுத்தாகும். அதனை ஓதுதற்குரிய திருவெண்ணீறணிதல் சிவமணி பூணுதல் சிவனடியாரையும் திருக்கோவிலையும் சிவனெனவே வழிபடுதல் முதலிய இனச் செயல்களுடன் கணித்தல்வேண்டும். அவற்றின் தொடர்பாய் திருமுறைத் திருப்பாட்டுக்களைப் பண்ணொடும் திறனொடும் பாடுதல் வேண்டும். அவ்வைந்தெழுத்தாய் இமைாய்ப், பண்ணாய்த் திறனாய்த் திகழ்பவனும் அவனே. அவற்றைப் படைத்தருளிய பரமனும் அவனே. அவனை அவனருளால் உணர்வின்கண் உணருங்கள். உணர்ந்தால் அது இது எனச் சுட்டறிவால் தோன்றும் வேறுபாட்டை நீக்கியருள்வன். உள்நின்று உருக்கி அன்பைப் பெருக்குவிப்பன். அதன் வாயிலாகத் திருவடிப் பேரின்பமாகிய ஊதியத்தை ஈந்தருள்வன்.

(அ. சி.) எண்ணும் - கணிக்கும். எழுத்தும் - ஐந்தெழுத்தும். இனம் செயல் - முறைப்படி கணித்தல் அவ்வழிப் பண்ணும் திறனும் - அம்மாதிரி சாதனம் செய்யும் முறையும். கண்ணிற் கவரும் - அறிவினால் அறியுங்கள். கருத்தில். . . . .ஆமே - அறிந்தால் சித்தத்தில் விகற்பத்தை நீக்கி ஒப்பற்ற ஊதியம் ஆவான்.

(15)

2997. இருக்கின்ற எண்டிசை அண்டம்பா தாளம்
உருக்கொண்டு தன்னடு வோங்கவிவ் வண்ணங்
கருக்கொண்டு எங்குங் கலந்திருந் தானே
திருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே.

(ப. இ.) யாண்டும் காரியமாய் நிலைபெற்றிருக்கின்ற எண்புலத் தோடும், அவ்வப் புலங்களில் காணப்படும் பல்வேறு அண்டங்களோடும், பாதாளத்தோடும் கலப்பால் 'உலகமே உருவமாகத்' திருவுருக்கொண்டுள்ளான். அவையனைத்தும் நெறிமுறையான் இயங்குதற் பொருட்டுத் தன்னிடத்து ஓங்கத் தான் நடுவாய்க்காரணமாய் நின்றுள்ளான். இம்முறையான் செம்மையுற எங்கணும் கலந்துள்ளான். அவனே திருக்கொன்றை மாலையினைப் பின்னல் திருச்சடைக்கண் சூடியருளிய சிவபெருமானாவன்.


1. கண்ணவன்காண். அப்பர், 6. 52 - 1.