592 .கொண்ட விரதங் குறையாமற் றானொன்றித் தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு மண்டல மூன்றினும் ஒக்க வளர்ந்தபின் பிண்டமும் ஊழி பிரியா திருக்குமே. (ப. இ.) உயிர்ப்புப்பயிற்சியாம் அகத்தவ நோன்பு குறைவுறாது கைக்கொண்டு அருளுடன் ஒன்றியபின், உயிர்ப்பு நடுநாடிவழியாக மேலேறிச் செல்லும். அது செல்லும் நிலையினரே அகத்தவ யோகியராவர். அவர்கட்கு ஞாயிறு, திங்கள், தீ ஆகிய மூன்றும் ஒப்ப வளரும் வளரவே உயிரினுக்கு அழிவில்லை. உடம்பும் ஊழி ஊழியாக நீங்காது. ஒருபுடை யொப்பாக ஒளிமண்டலம் மூன்றும் முறையே வளியும், ஐயும், பித்தமும் ஒப்ப நிற்பிக்கும் குறிப்பாகும். வளி - வாதம். ஐ - சிலேத்துமம். மண்டலம் மூன்று - ஞாயிறு, திங்கள், தீ என்னும் ஒளி நிலைக்களங்கள் மூன்று. பிண்டமும் - உடலும். ஊழி - உலகப் பேரொடுக்க எல்லை. (அ. சி.) தண்டுடன் - வீணாத்தண்டுடன். மண்டலம். மூன்று - சந்திர, சூரிய, அக்கினி. (15) 593. அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டு அவ்வவர் மண்டலத் தவ்வவர் தேவராம் அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில் அவ்வவர் மண்டல மாயமற் றோர்க்கே. (ப. இ.) புறத்தும் அகத்தும் காணப்படும் அவ் வொளிமண்டலங்கள் மூன்றினுக்கும் துச்சில்போன்று அவ்வவரே கட்டிக் காக்கும் உரிய தேவராவர். அவ் வொளிமண்டலங்கள் அத் தேவர்கட்கு உரிமையும் ஏனையார்க்குத் துணைக்கருவிக் கூட்டமுமாகும். அவ் வவர் மண்டலம் - ஞாயிறு திங்கள் தீ இவற்றின் நிலைக்களங்கள். ஆயம் - ஏனைய உலக வுயிர்கட்குச் சுற்றுத் துணைக்கருவிக் கூட்டம். (16) 594. இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளே முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித் துளைப்பெரும் பாசத் துருவிடு மாகில் இளைப்பின்றி மார்கழி ஏற்றம தாமே. (ப. இ.) ஆணவவல்லிருள் முனைப்பதற்கிடமாகிய உடம்பகத்து நெஞ்சம் இளைக்கின்றது. தோன்றும் ஒளிமண்டலம் மூன்றினும் ஒற்றுமைப்பட்டு அன்பினால் துருவி ஆராய்வார்களானால் இளைப்பகலும். திருவருள் பெருவெளிக்கண் ஆராய்தல்வேண்டும். திங்களுள் மார்கழி ஏற்றமதாகும். எதனாலென்றால் மார்கழித் திங்கள் திருவாதிரைத் திருநாளாகும். திருவாதிரைச் செம்மீன் சிவபெருமானுக்குச் சிறப்புரிமையுடையது. உலகத் தோற்றத் தொழில்கள் முற்றுற்று விடிந்ததும் உலகந் தோற்றலுறும் அதனாலென்க. அதுபோல அகத்தவம் உடையராயினார்க்கு அகத்தே புதிய நிகழ்ச்சிகள் உண்டாகும். மார்கழி - மா + கழி (ர்: எழுத்துப்பேறு.) மா - கருமை. கழிதல் - நீங்குதல். இதுவே தோற்றப்பெருநாளாகும். இருட்டறை - ஆணவவல்லிருள் வண்ணமாம்
|