27
 

63. இருக்குரு வாம்எழில் வேதத்தி னுள்ளே
உருக்குணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குரு வாகிய வேதியர் சொல்லுங்
கருக்குரு1 வாய்நின்ற கண்ணனு மாமே.

(ப. இ.) இருக்காகிய மந்திரங்களின் தொகுப்பு ஆதிமறை என்ப. அம் மறையினுள் உணர்வையுருக்கும் பொருள்சேர் புகழ்ப் பாடலால் சிறந்தனவற்றை விருப்புடன் சிவவேதியர் சொல்லுவர். கண்ணன் முதலிய தேவர்கட்கும் மூலகுருவாய் எழுந்தருளுபவன் சிவனே. கண்ணன் முக்கண்ணன் எனலுமாம்.

(அ. சி.) இருக்கு உருவாம் எழில் வேதம் - இருக்கு என்று சொல்லப்படுகின்ற சுலோகங்களையுடைய ஆரிய வேதம்.

(3)

64. இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனுஞ் சோமனும் ஆரழல் வீச
உருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே.

(ப. இ.) அளிவில்லாத மந்திரங்களில் சிவன் எழுந்தருள்வன். பொருந்தியுள்ள மூலத்திடத்தும் ஓம் என்னும் மூலமந்திரத்தினிடத்தும் இருப்பன். ஞாயிறும் திங்களும் ஒளி வீசும்படி ஆருயிர்களின் உடம்பகத்துக் காணும் மயிர்க்கால்தோறும் அருள்ஒளி தோன்றும். அதனால் அங்குச் சிவன் உறைந்தருள்வன். அருகுகின்ற என்பது அருக்கின்ற எனத் திரிந்து நின்றது: அருகுதல் - பொருந்துதல்.

(4)

65. திருநெறி யாவது சித்தசித் தன்றிப்2
பெருநெறி யாய பிரானை நினைந்து
குருநெறி யாஞ்சிவ மாநெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.

(ப. இ.) திருநெறி என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது அறிவிக்க அறியும் சித்தும் அறிவித்தாலும் அறியுந்தன்மையாகிய அறிவில்லாத அசித்தும் அல்லாதவன் சிவன். இயல்பாகவே விளங்கும் பேரறிவினையுடையவன் அவன். சித்து - அறிவுடையது. அசித்து - அறிவில்லது. அவன் வகுத்தருளிய நன்னெறி பெருநெறி என வழங்கப்பெறும். அந் நெறியின் முதல்வனும் சிவபெருமானே. அப் பெருமானையே நினைக்கும் திருவடி யுணர்வை நல்கியருளும் சிவகுரு எழுந்தருள்வது குருநெறியாகிய சிவமாநெறிக்கண் என்று கொள்க. அதுவே திருவடியின்கண்கூடச் செய்யும் ஒப்பில்லாத் தனிநெறி. இவற்றை ஒருங்கு ஓதுவது மறைமுடிவாம் வேதாந்தம் எனப்படும். மூவர் தமிழ் மறையும், முனிவராம் மணிமொழியார் தமிழ் மறை முடிவுமென இஞ்ஞான்றும் கொண்டு ஒழுகுவதே செந்நெறிச் செல்வரின் சீரிய கடன்.

(அ. சி.) குருநெறி - சன்மார்க்கம்; நன்னெறி.

(5)


1. ஆரண. சிவஞானசித்தியார், 1. 2 - 26.

2. சிவனரு. " 1. 3 - 11.

" உணருரு. சிவஞானபோதம், 6.