இணையில் வண்பெருங் கருணையே யேத்திமுன் னெடுத்தசொற் பதிகத்திற் புணரும் இன்னிசை பாடின ராடினர் பொழிந்தனர் விழிமாரி." - 12. சம்பந்தர், 161. அங்ஙனம் செம்பு பொன்னாவது போன்று மேனிலை எய்திய உள்ளத்தர் திருவருளால் திருவடிப்பேறு தெரிந்து பொருந்திய மோனத்தராவர். மோனம் - மேன்மைஞானம். அவரே சிவப்பேற்றினராவர். இங்ஙனம் பேறுபெற்றார் ஐம்மலத்தொடக்கற்ற செம்பொருட்டுணிவினராவர். சித்தமாகிய எண்ணம் திருநடம்புரியும் செம்பொருளில் சேர்ந்தோராவர். சித்தம்பரமாகிய தில்லைச் சிற்றம்பலத்தின் திருநடங்கண்ட திருவினராவர். என்றலும் ஒன்று. சுத்தம் என்பதற்கு மலமிலாத் தூய்மை எனவோ தூநிலைப்பாடு எனவோ கூறலும் ஒன்று. சுத்தம் - மாசின்மை (தூயநிலை). ஐந்து - ஐம்மலம்; எண்பேறுள் மனத்தாலெய்துவன ஐந்துமாம். தொடக்கு - பிணிப்பு. (அ. சி.) திரிந்து - புலன் வழியினின்றும் திரிந்து. முத்தம் - முத்தி. சித்தம்பரம் - சிதம்பரம், சிதாகாயம். (13) 633. ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன ஒத்தஇவ் ஒன்பதின் மிக்க தனஞ்சயன் ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட ஒத்த வுடலும் உயிரும் இருந்தவே. (ப. இ.) ஒன்பதிலொக்க இருந்திட - பத்து நாடிகளுள் நடுநாடி ஒழித்து ஒன்பது நாடிகளிலும் ஒன்பது காற்றுக்களும் முறையே கூடியிருக்க. நரம்பு என்றாலும் நாடி என்றாலும் ஒன்று. பத்து நாடியும் முறையே காண்க: இடப்பால் நரம்பு, வலப்பால் நரம்பு, நடுநரம்பு, உள்நாக்கு நரம்பு, வலக்கண் நரம்பு, இடக்கண் நரம்பு, வலச்செவி நரம்பு, இடச்செவி நரம்பு, கருவாய் நரம்பு, எருவாய் நரம்பு என்பன. இவற்றை முறையே: இடகலை, பிங்கலை, சுழுமுனை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குகு என்ப. இவற்றுள் வீங்கற் காற்றாகிய தனஞ்சயன் நடுநரம்பி (சுழுமுனை)ல் தங்குவது. ஒத்த உடலும் உயிரும் - (தம்முள்) ஒத்துவாழும் உடலும் உயிரும் நெடுநாள் நீங்காது ஓங்கிவாழும். (அ. சி.) ஒன்பது வாயு - தனஞ்சயன் ஒழிந்த ஒன்பது வாயு. (14) 634. இருக்குந் தனஞ்சயன் ஒன்பது காலில் இருக்கும் இருநூற் றிருபத்து நான்கில் இருக்கு முடலி லிருந்தில வாகில் இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே. (ப. இ.) வீங்கற்காற்று ஏனைக்காற்று. ஒன்பதும்போல் இருக்கும். இருக்கு.....வெடித்ததே - இருநூற்று இருபத்துநான்கு உலகங்களிலும் வாழும் உயிர்களின் உடலில் வீங்கற்காற்று பாங்குறநிற்கும். இக் காற்று வெளிப்பட்டுவிட்டால் உடல்வீங்கி வெடித்திடும்.
|