வருள் மீண்டும் வெளிப்பட்டால் உலகந்தோன்றும். அவ் வருள் சிவத்தின்கண் ஒடுங்கும். அருள் ஒடுங்கினால் பூதங்களும் ஒடுங்கும். விரிந்து - (திருவருளாற்றல்) உலகு உயிர்கட்கு மீநிறைவாய். குவிந்து - உடையானிடத்து வீழ்நிறைவாய். மீநிறைவு - வியாபகம். வீழ்நிறைவு - வியாப்பியம். (வீழ்தல் - ஒத்தல், சமம்.) கரந்து....ஒடுங்கே - திருவருளாற்றல் சிவத்தில் ஒடுங்கி மீண்டும் எழுந்து வெளிப்பட்டால் பார் முதலிய பூதங்கள் வெளிப்படும். அவ் வாற்றல் சிவத்தில் ஒடுங்கினால் பூதங்கள் ஒடுங்கும். இரைந்தெழு வாயு - ஓசையுடன் மேலெழும் உயிர்ப்பு, ஒடுங்கே - ஒடுங்குமே. உயிர்ப்பு - பிராணவாயு. (25) 645. இடையொடு பிங்கலை என்னும் இரண்டும் அடைபடு வாயுவும் ஆறியே நிற்குந் தடையவை 1யாறெழுந் தண்சுட ருள்ளே மிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே. (ப. இ.) இடப்பால் வலப்பால் மூக்குகளிரண்டாலும் உள்ளுறை உயிர்ப்பும், ஆறியே நிற்கும் - அடங்கியே நிற்கும். தடையவை ஆறு - குற்றமாகத் தடுக்கும் தீப்புண் ஆறு: செருக்கு, சினம், சிறுமை, இவறல், மாண்பிறந்த மானம், மாணாவுவகை. எழும்...வொடுங்கே - புருவ நடுவில் தோன்றும் குளிர்ந்த நிலாமண்டலத்தின் ஒளியுள்ளே அடங்கி வளர்கின்ற மின்னற்கொடியாம் ஆற்றலில் ஒடுங்கும். மிடை - அடக்கம். (26) 646. ஒடுங்கி ஒருங்கி உணர்ந்தங் கிருக்கில் மடங்கி அடங்கிடும் வாயு வதனுள் மடங்கி அடங்கிடு மன்னுயி ருள்ளே நடங்கொண்ட கூத்தனை நாடுகின் றேனே. (ப. இ.) ஒடுங்கி - அடங்கி, ஒருங்கி - ஒருதன்மைப்பட்டு. உணர்ந்து - அழுந்தியறிந்து. அங்கு - திருவருளாற்றலில். இருக்கின் - உறைத்து நின்றால். மடங்கி.....அதனுள். உயிர்ப்பும் அதனுள் அடங்கித் தங்கிடும். மடங்கி....றானே. உயிர்ப்படக்கத்தால் புறத்துப்புலன் செல்லாது அகத் தடங்கும். உயிரினுள்ளே திருக்கூத்துக்கொண்டருளும் கூத்தப் பெருமானை நாடுகின்றவனாவேன். (27) 647. நாடியின் உள்ளே நாதத் தொனியுடன் தேடி யுடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு மாடி ஒருகை மணிவிளக் கானதே. (ப. இ.) நடுநாடியினுள்ளே அருளொலியுடன் ஆராய்ந்து ஒருங்கு சென்று அவ் வருளை மேற்கொண்டு, பாடியு....கானதே - உடம்பினுள் பகையாய் நின்ற மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐவரையும் அருளால் அடக்க அவ் வுடம்பு அளவில் பெருமையினையுடைய சிறந்த தூண்டாவிளக்கு ஆயது. (அ. சி.) மாடி - பெருமையினையுடைய. (28)
(பாடம்) 1. யாறேழுந்.
|