கிடைத்தவிடத்தும், அனைத்தையும் தாங்கும் அருட்சடையோடு விளங்கும் பேரின்பத்தலைவன் அறத்தின் வடிவாம் ஆனேற்றின்மீது வீற்றிருந்தருள்வன். அவ் விறைவனை அகம் புறம் ஒத்து வழிபடுதல் வேண்டும். சடை - திருவாதிரைநாள்; தாங்குமிடம். புடை - செறிவு. (4) 696. இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார் பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி ஒருக்கின்ற வாயு வொளிபெற நிற்கத் தருக்கொன்றி நின்றிடுஞ் சாதக னாமே. (ப. இ.) மக்கள் தம் வாழ்நாட்களுள் இதுகாறும் சென்ற நாட்கள் போக எஞ்சி இருக்கின்ற நாட்கள் இவ்வளவு என்றும் அறியார்; மூச்சுப் பயிற்சியினால் வாழ்நாட்களை மிகுதிப்படுத்துதற்குரிய வழியின் பெருமையைப் பார்த்து, வாழ்நாளை அழிக்கும் புறத்துச்செல்லும் உயிர்ப்பினை அடக்கினால் செருக்ககன்ற நன்னெறியில் செல்லும் தொண்டனாவன். ஒருக்குதல் - அழித்தல். சாதகன் - தொண்டன். (அ. சி.) இருக்கின்ற காலம் - இனி வாழுங்காலம். (5) 697. சாதக மானஅத் தன்மையை நோக்கியே மாதவ மான வழிபாடு செய்திடும் போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால் வேதகமாக விளைந்து கிடக்குமே.1 (ப. இ.) தொண்டுநெறியான அத் தன்மையை நோக்கிப் பெருந்தவமாகிய அகவழிபாடு செய்திடுக. பரவெளியில் காணப்படும் ஆயிரம் இதழ்த் தாமரையின்கண் உயிர்ப்பினைச் செலுத்துக. செலுத்தினால் செம்பு முதலியன குளிகையினால் பொன்னாவதுபோல் ஆவியும் சிவனாக விளங்கும். வேதகம் - செம்பு பொன்னாதல். (அ. சி.) போதகமாக - சகசிர அறையில். (6) 698. கிடந்தது தானே கிளர்பயன் மூன்று நடந்தது தானேஉள் நாடியுள் நோக்கிப் படர்ந்தது தானே பங்கய மாகத் தொடர்ந்தது தானேஅச் சோதியுள் நின்றே. (ப. இ.) மேலாம் அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று பயனும் விளங்கிக் கிடந்தன. நடந்தது....நோக்கி - உயிர்ப்பு நடுநாடியை நோக்கி நடந்தது. படர்ந்தது....மாக - பரவெளியில் விளங்கும் ஆயிர இதழ்த்தாமரையைச் சார ஆவி இடையறாது நினைந்தது. தொடர்ந்தது... நின்றே - பேரொளி அறிவுப் பிழம்பாம் சிவமுதல் உயிர்க்குயிராய் நின்று தொடர்ந்தது என்க. (7)
1. செம்பிரத. சிவஞானசித்தியார், 11 : 2 - 3.
|