331
 

(ப. இ.) உயிர் வெளிச் செல்லும் சிறந்த வாயில்களாகிய கண், செவி, மூக்கு, வாய் என்னும் அறிகருவி நான்கும் ஒன்றுகூடும் அண்ணத்திடத்து, அதன்மேலிருக்கும் அமிழ்த யாறு வரும் தொளை கீழ்நோக்கி ஒழுகும். அவ்வொழுக்கு ஆறாய் வீணாகாது, உச்சித்தொளைக் குகையில் நிரப்பி அத்தொளையை நாநுனியால் அடைக்க அதை நடுநாடி வழியாகச் செலுத்தி அக்குளத்திலே நிரப்பினால் மேல்நோக்கும் எண்ணம் தோன்றும். தோன்றவே இருட்சார்பாம் மருள்மயக்க அழுக்கு அகலும்.

(அ. சி.) வண்ணான் - பிராணன். சதுரப் பலகை - நாற்சந்தி. மேற் கண்ணாறு - அமுதம் வரும் மேலைத்துவாரம். மோழைபடாமல் - வீண்போகாமல். குளம் - கபாலக்குகை, மனம்.

(2)

781. இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்
துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டாம்
உறக்கத்தை 1நீக்கி உணரவல் லார்கட்கு
இறக்கவும் வேண்டாம் இருக்கலு மாமே.

(ப. இ.) இடநாடி வலநாடி வழியாகக் கீழ்நோக்கும் அமிழ்தினை மாற்றி, உள்நாக்கை வளைத்துத் துதிக்கைபோலமைத்து அத்தொளைகளை அடைத்து நடுத்தொளை வழியாக நுகர்வார்க்கு இறப்பிற்கு அஞ்சிச் சோர்வடைதல் ஏற்படாது. (உயிர்ப் பண்பாகிய 'உண்டி, உறக்கம், பயம், இன்பம்' ஆகிய நான்கனுள் உறக்கம் மட்டும் சொல்லப்பட்டுள்ளது; இனம்பற்றி ஏனையவும் சேர்த்துக்கொள்ளுதல்வேண்டும்.) உறக்கமுதலிய உயிரின் பொதுக்குணம் கொள்ளாது சிவபெருமான் திருவடியை இடையறாது எண்ணும் திண்ணிய சிறப்புக் குணம் கொள்ளும் மெய்யடியார்கட்கு இறப்பும் நேராது. விழைந்த நாளெல்லாம் உடம்போடு வாழுதலும் கூடும். துதிக்கை: நுதிக்கை; முனையுள்ளகை.

(அ. சி.) இடக்கை, வலக்கை - இடகலை, பிங்கலை. துதிக்கை - சுழுமுனை.

(3)

782. ஆய்ந்துரை செய்யில் அமுதநின் றூறிடும்
வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து
நீந்துரை செய்யில் நிலாமண் டலமதாய்ப்
பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே.2

(ப. இ.) செந்தமிழ்த் திருமாமறை முதலியவற்றை நன்கு ஆராய்ந்து கூறுமிடத்து, நெற்றியமிழ்து நிலைபெற்று ஊறுந்தன்மை கைகூடி மிகுதிப்படும் செவ்வி வரும் என்பது புலனாம். அது வரும் பொழுது, மிகுதியாகக் கூறப்படும் மதிமண்டலத் திருந்து திருவடியை நினையுமாறும் அவ்வமிழ்தை ஓம்புமாறும் நவில்வதுண்டாகும். அங்ஙனம் நவிலுவதே இப் பகுதியின் நோக்கமாகும். நவிலுதல் - சொல்லுதல். வாய்ந்து - கைகூடி. துரை - மிகுதி. நீந்துரை - மிகுதி. நிலா மண்டலம் - நெற்றிநடு. பாய்ந்து - பாவித்து, நினைத்து பாலிக்கும் - ஓம்பும்.


1. புழுவுக். அப்பர், 3. 91 - 4.

2. உரைமாண்ட, 8. திருத்தோணோக்கம், 14.