877. தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத் தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத் தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத் தலைவனு மாய்நின்ற தாளிணை தானே. (ப. இ.) அடிமையாகிய உயிருலகம், உடைமையாகிய உயிரல் உலகம் அனைத்திற்கும் என்றும் பொன்றாத் தலைவனுமாய் நின்றருள்பவன் தற்பரக்கூத்தன். அவனே என்றும் ஒன்றுபோல் விளங்கும் நிலைப் பொருளாகிய சற்பாத்திரமாவன். மணத்தூளாகிய பேருணர்வுத் தாளிணை என்னும் தாமரை போலும் திருவடியை உடையவனாக விளங்குபவனும் அவனே யாவன். (அ. சி.) சற்பாத்திரம் - சத்து. (14) 878. இணையார் திருவடி எட்டெழுத் தாகும் இணையார் கழலிணை யீரைந்த தாகும் இணையார் கழலிணை ஐம்பத்தொன் றாகும் இணையார் கழலிணை ஏழா யிரமே.1 (ப. இ.) தமக்குத் தாமே ஒப்பாகிய திருவடிகள் இரண்டும் எட்டெழுத்தாகும். எட்டெழுத்து: ஓம், அம், உம் நமசிவய அத்தகைய கழிலிணைகள் இரண்டும் இருவகை ஐந்தெழுத்தாகும். இருவகை ஐந்தெழுத்து: சிவயநம; சிவயசிவ. அவையே ஐம்பத்தோரெழுத்துமாகும். பண்டைக் காலத்தில் தமிழ் எழுத்துக்கள் ஐம்பத்தொன்றாக வழங்கி வந்தன. பின் உயிர்ப்புச் செட்டு நோக்கி முப்பதாக அமைத்தனர். ஏனைய ஒலிகளை ஒலிப்பிக்க நேரின் ஒலிப்பிக்கும் வாய்ப்பாக ஆய்தம் (ஃ) என்னும் கருவி எழுத்தொன்றும் அமைத்துக் கொண்டனர். அத்தகு கழலிணைகள் ஏழாயிரமாகும். ஏழாயிரம் என்பது ஏழுவகைத் திருவருளாற்றலாகும். ஆற்றல் ஏழு: கலைமகள், அலைமகள், உலைமகள், சலமகள், மலைமகள், நிலைமகள், தலைமகள் என்ப. இவ் வெழுவகை ஆற்றல்களின் தொழில்கள் முறையே படைத்தல், காத்தல், துடைத்தல், மறைத்தல், அருளல், கலப்பித்தல், களிப்பித்தல் என்பன. இவ் வெழுவகை யாற்றல்களும் முறையே வாணி, திரு, உமை, மகேசை, மனோன்மணி, விந்து, சத்தி' என்று கூறப்பெறும். ஐம்பத்தோரெழுத்தை ஓதும் ஆசிரியர் முப்பதெழுத்து வழங்கத் துவங்கிய காலத்தவராதலான் முப்பதெழுத்தே வழங்குகின்ற தொல்காப்பியர் காலத்துக்குச் சற்று முன்னாவரென எண்ணுதல் தவறாகாது. (அ. சி.) எட்டு எழுத்து - அ. (15) 879. ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய் ஏழா யிரத்தும் எழுகோடி தானாகி ஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம் ஏழா யிரண்டாய் இருக்கின்ற வாறே.
1. சத்தியாய், சிவஞான சித்தியார், 2 - 4 - 3. " இணையார், 8. திருப்பூவல்லி, 1.
|