367
 

(ப. இ.) திருவருளாற்றல்கள் ஏழானும் செலுத்தப்படும் எழுத்துக்கள் ஐம்பதாகும். மந்திரங்கள் ஏழு முடிபினை உடையன எனவும் கூறுவர். முடிபு - கோடி. பயனை உடனே கைகூடச் செய்யும் உயிர் மந்திரங்கள் பலவாகும். (வியாகிருதி மந்திரம் ஏழு, அம்ச மந்திரம் இரண்டு எனவும் கூறுவர்.) திருவருளாற்றல் மந்திரம் ஏழு; சிவ என்னும் மந்திரம் இரண்டனுள் எல்லாம் அடங்கும்.

(16)

880. இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம்
இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை
இருக்கின்ற மந்திரஞ் சிவன்திரு மேனி1
இருக்கின்ற மந்திரம் இவ்வண்ணந் தானே.

(ப. இ.) ஏழுகோடிப் பெருமந்திரங்களினுள்ளும் இந்த அசபா மந்திரத்துக்கு ஒப்பானது ஏதும் இல்லை. மந்திரங்கள் எல்லாம் சிவன் திருமேனியாகும்.

(17)

881. தானே தனக்குத் தகுநட்டந் தானாகும்
தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானே இரீங்காரத் தத்துவக் கூத்துக்குத்
தானே உலகில் தனிநடந் தானே.

(ப. இ.) சிவ என்னும் ஈரெழுத்தும் ஒப்பில்லாத சிறந்த திருக்கூத்தாகும். அவையே அகர உகரங்களாகவும் நிற்கும். மேலும் உலகத் தோற்ற ஒடுக்கங்களுக்கு முதற்காரணமாயுள்ள மாயைக்கு அடிப்படை மந்திரமாயுள்ள இரீங்கார மந்திரமும் அதுவே யாம்.

(அ. சி.) ரீம் - மாயையின் பீச மந்திரம்.

(18)

882. நடமிரண் டொன்றே நளினம தாகும்
நடமிரண்டொன்றே நமன்செய்யுங் கூத்து
நடமிரண் டொன்றே நகைசெயா மந்திரம்
நடஞ்சிவ லிங்கம் நலஞ்செம்பு பொன்னே.

(ப. இ.) ஆருயிர்கள்மாட்டுப் பொருந்திப் புரியும் திருக்கூத்திரண்டாகும். அவை முறையே மருட்கைக் கூத்தும் இன்பக் கூத்துமாகும். மருட்கை - வியப்பு; அற்புதம். இவை உயிர்கட்கு நீங்கா இன்பம் அளித்தற்பொருட்டேயாம். ஊழி முடிவும் உலக முடிவும் ஆகிய இருவேறு கூத்துக்களும் நிகழும். இக் கூத்தினை நமன் கூத்து என்பர் ஊழி முடிவு - பிரளயம். உலகமுடிவு - சங்காரம். மகிழ்ச்சிக்கு ஏதுவாய் அகத்தும் புறத்தும் ஆடும் கூத்துக்கள் இரண்டு. அகக் கூத்தை, அனவரதக் கூத்தென்பர். புறக்கூத்தை, பொதுக்கூத்து என்பர். செம்பு போன்று மலத்தோடுள்ள உயிரை மல நீக்கிப் பொன்னாக்கிப் போற்றித் திருவடியில் வாழ்விக்கும் திருக்கூத்து ஒன்று.


1. மந்திர. சிவஞானசித்தியார், 1. 2 - 31.

" ஆடும், சேர்க்குந், ஓங்கார. உண்மை விளக்கம், 33 - 35.

" அஞ்செழுத்தே. " 45.