நிலை இரண்டும் முறையே உலகியலைப் பெரிதாகவும் வீட்டியலைப் பெரிதாகவும் கொள்ளும் குறிப்பினவாகும். (6) 900. இருந்தஇவ் வட்டம் இருமூன்றி ரேகை இருந்த வதனுள் இரேகையைந் தாக இருந்த அறைகள் இருபத்தைந் தாக இருந்த அறையொன்றில் எய்தும் அகாரமே.1 (ப. இ.) எண்ணூற்று எண்பத்துநான்காம் திருப்பாட்டில் ஓதியவாறு திருவம்பலச்சக்கரம் அமைத்த இடத்து அதன் ஓர் அறையின்கண் அகரம் அமையும். அகரம் சிவபெருமானின் அடையாள எழுத்தாகும். (அ. சி.) அகரம் - அகர உருவனாகிய சிவன். (7) 901. மகார நடுவே வளைத்திடுஞ் சத்தியை ஒகாரம் வளைத்திட் டும்பிளந் தேற்றி அகாரந் தலையாய் இருகண் சிகாரமாய் நகார வகாரநற் காலது நாடுமே. (ப. இ.) இதன்கண் திருவம்பலச்சக்கரம் எழுத்துமுறை அமைப்பினால் தலை, கண், கால் முதலிய உறுப்புக்களோடமைந்த ஓர் ஆள் வடிவமாகத் தோன்றுமுறை ஓதப்பெற்றுள்ளது. (அ. சி.) மகாரம் - நாதம். சத்தி - சத்திபீசம். ஒகாரம் வளைத்திட்டு - ஒ எழுதி. உம் பிளந்து - உம் என்பதை நீக்கி அகரம் தலையாய் - அகரம் சிரசாக. இருகண் சிகாரமாய் - சிகரம் கண்களாய். நகாரம் வகாரம் - நகரம், வகரம் கால்களாய் இது சிதம்பரச் சக்கர நடுவில் ஈசனை மனித உருவமாகக் காணும் முறை கூறியது. (8) 902. நாடும் பிரணவ நடுவிரு பக்கமும் ஆடு மவர்வாய் அமர்ந்தங்கு நின்றது நாடு நடுவுண் முகநம சிவாய வாடுஞ் சிவாயநம புறவட்டத் தாயதே. (ப. இ.) இதன்கண் ஓங்காரநடுவில் சிவமும், நடுவட்டத்தில் நமசிவய முகமுமாக அமைத்தல் ஓதப்பெறுகின்றது. சிவபெருமான் "ஒருசுடராய் உலகேழு மானான்கண்டாய், ஓங்காரத்துட் பொருளாய் நின்றான் கண்டாய்" எனத் திருத்தாண்டகத் திருப்பதிகத்தின்கண் வருவதுங் காண்க. (அ. சி.) பிரணவநடு இருபக்கமும் - பிரணவ நடுவில் இருபக்கத்திலும். அவர் - அந்த சத்தி சிவங்களின். ஆடும் வாய் - பேசும் வாய். நடுவுள் - நடுவட்டத்தில் முகம் நமசிவாய - நமசிவாய என்பது முகமாக. புறவட்டம் - மேல்வட்டம். (9)
1. அகரமென விநாயகபுராணம், வாழ்த்து.
|