436
 

சித்தொளையின் மேலுள்ள அருள் வெளியும் தானேயாம். அவள் தையல் நல்லாளாவள்.

(அ. சி.) கொண்...கள் - வயிரவி என்கிற மனோன்மனி சத்தியானவள் வேண்டும் கோலம் பூண்டு. கண்டனள் - உண்டாக்கினாள். எண்...மாலைகள் - 64 கலைகளின் பதிகங்கள் அல்லது கோவைகள். விண்ட...மூன்றை - காலதத்துவ காரணராகிய சோமன் - சூரியன் - அக்கினி இவற்றை ஆக்கினாள். தண் தலை மேல் நின்ற - குளிர்ச்சி பொருந்திய சகசிர அறையுள் நின்ற.

(28)

1079 .தையல்நல் லாளைத் தவத்தின் தலைவியை
மையலை நோக்கும் மனோன்மனி மங்கையைப்
பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்
வெய்ய பவமினி மேவகி லாவே.

(ப. இ.) எல்லாவற்றையும் படைத்துக் காக்கும் நல்லாளை, சீலம் நோன்பு செறிவு அறிவு என்னும் மெய்த்தவம் நான்மையின் தலைவியை, ஆருயிர்களின் மயக்கங்கள் அத் தவப்பேற்றால் அகலும்படி திருக்கடைக்கண் நோக்கருளும் மனோன்மனி மங்கையை, அமைதியாய் அமர்ந்து திருமுறை ஓதி வழி பாடியற்றிப் பணியுங்கள். பணிந்த பிற்பாடு கொடிய பிறவிநோய் அற்று ஒருகாலும் மீண்டும் பொருந்தாதகலும்.

(அ. சி.) தவத்திற் றலைவி - சகசிர அறைத் தலைவியை.

(29)

1080 .வேயன தோளி விரையுறு மென்மலர்
ஏய குழலி இளம்பிறை ஏந்திழை
தூய சடைமுடிச் சூலினி சுந்தரி
ஏயென துள்ளத் தினிதிருந் தாளே.1

(ப. இ.) மூங்கில்போலும் தோளையுடையவள்; மணமுள்ள பூவை அணிந்தவள்; பிறையும் அணியும் பூண்டவள்; தூயசடைமுடியையுடையவள், சூலத்தையுடையவள், அழகினள், அடியேன் உள்ளத்தும் பொருந்தி எனக்கும் இன்பந் தந்துகொண்டிருக்கின்றனள்.

(30)

1081 .இனியதென் மூலை இருக்குங் குமரி
தனியொரு நாயகி தானே தலைவி
தனிப்படு வித்தனள் சார்வு படுத்து
நனிப்படு வித்துள்ளம் நாடிநின் றாளே.

(ப. இ.) புறத்தும் அகத்தும் தென்மேல் மூலையில் வீற்றிருந்தருள்வள். என்றும் ஒருவடிவாயிருத்தலின் குமரி எனும் திருப்பெயர் பூண்டனள். ஒப்பிலாத முதல்வி, தானே தலைவி. மாயாகாரியமாகிய உடல் உலகு முதலியவற்றின் நிலைமையுணர்த்தி நீ இவற்றின் வேறு எனத் தனிப்படுத்தினள். சிவபெருமான் திருவடிச் சார்பே நிலையான சார்பெனச் சார்வித்தனள். என்னை நாடி என்னகம் உறைந்து என்னை மிகவும் மேற்படுத்தியருளினள்.


1. வேயனைய. சம்பந்தர், 3. 69 - 4.