441
 

(ப. இ.) எண்ணம் மனம் இறுப்பு என்னும் மூன்றும் முறையே சித்தம் மனம் புத்தி என வழங்கப்படும். இம் மூன்றும் முதல்வி இயைந்தியக்க இயங்குவன. அதனால் ஆண்டு உறைகின்றனள் என்ப. இடப்பால் வலப்பால் நடுநாடி என்னும் மூன்றனுள் பிள்ளைத்தடமெனப் பேசப் பெறும் நடுநாடியினுள் அகவொலி தோன்ற அருளியவளும் அவளே. வள்ளலாகிய சிவபெருமான் திருவடியுணர்வாகிய அகத்தினுள் காரண மாயையின்கண் மறைந்துநின்று அதைக் கொண்டு ஒளியருளும் திருவுள்ளம் சேர் அம்மை கன்னித் தெய்வமாகும்.

(அ. சி.) ஒரு மூன்று - இடகலை, பிங்கலை, சுழுமுனை, பிள்ளைத்தடம் - சுழுமுனை.

(43)

1094 .கன்னியுங் கன்னி அழிந்திலள் காதலி
துன்னியங் கைவரைப் பெற்றனள் தூய்மொழி
பன்னிய நன்னூற் பகவரும் அங்குள
என்னேஇம் மாயை இருளது தானே.1

(ப. இ.) ஆணைசேர் தெய்வங்களைப் படைத்தும் அருளம்மை கன்னித் தன்மை நீங்கிலள். அஃதாவது அம்மை திருவுள்ளத்தால் - நினைப்பால் படைக்கின்றமையின் எவ்வகை மாறுதலும் எய்திலள் என்பதாம். ஆருயிர்களிடத்துத் துன்பம் துடைக்கும் பெருங்காதலுடைய அம்மை ஆருயிர்களுடன் ஒன்றாய்க் கலந்து அயன், அரி, அரன், ஆண்டான், அருளோன் என்னும் ஐவரை (அயன், அரி, அரன், ஈசுரன், சதாசிவன்) ஈன்றருளினள். தூய்மை நிறைந்த மொழிகள் அடங்கிய மறையும் முறையும் என்னும் தமிழ்வேதாகமங்களை மெய்யடியார்கள் வழி அருளிச் செய்தனள். இத்தகைய இடத்தே விளக்கடியில் இருள் இருப்பதுபோல் செருக்கு, சினம், சிறுமை, இவறல், மாண்பிறந்த மானம், மாணாவுவகை என்னும் அறுவகை மாயை ஆற்றலும் நமக்குப் பகையாய் நம்முடனிருக்கின்றன. அறியாமையாகிய இருளும் ஆண்டுள்ளது. இருளுடன் கூடியதனால் ஒளிக்குத் துணையாம் மாயையும் இருளாய் நிற்கின்றது.

(அ. சி.) ஐவர் - அயன், அரி, அரன், ஈசன், சதாசிவன். நன்னூல் - 64 கலைகள். பகைவர் - காமக் குரோத முதலியவைகள்.

(44)

1095 .இருளது சத்தி ஒளியதெம் அண்ணல்
பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம்
தெருளது சிந்தையைத் தெய்வமென் றெண்ணில்
அருளது செய்யும்எம் ஆதிப் பிரானே.


1. சிவஞ்சத்தி. சிவஞான சித்தியார், 2. 4 - 5.

" நோக்காது. சிவஞானபோதம், 1. 2 - 3.

" நீடு. வினா வெண்பா, 1.

" ஒளிக்கு. கொடிக்கவி, 1.

" பாலனை. அப்பர், 4. 88 - 1.

" ஏயி " 5. 91 - 1.