1104 .இன்பக் கலவியில் இட்டெழு கின்றதோர் அன்பிற் புகவல்ல னாம்எங்கள் அப்பனும் துன்பக் குழம்பில் துயருறும் பாசத்துள் என்பிற் பராசத்தி என்னம்மை தானே. (ப. இ.) கருவாய்க் கிடந்து கருக்குழியில் துன்புறுங் காலத்து நடுநாடியின்கண் நடப்பாற்றலாகிய அம்மை கலந்திருந்து காத்தருளுகின்றனள். பின் திருவடியின்பில் கலத்தற்பொருட்டு ஆவிகளின் அன்பினை எழச் செய்து அவ்வன்பு வாயிலாக நம் ஆருயிர்த் தந்தையாகிய சிவபெருமானும் எழுந்தருள வல்லனாவன். (அ. சி.) துன்பக் குழம்பு - கருப்பாசயம். பாசம் - சரீரம். (4) 1105 .என்னம்மை என்னப்பன் என்னுஞ் செருக்கற்று உன்னம்மை ஊழித் தலைவனும் அங்குளன் மன்னம்மை யாகி மருவி யுரைசெய்யும் பின்னம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே.1 (ப. இ.) நிலையாத உடலின் தொடர்பாக என் அம்மை எனவும் என் அப்பன் எனவும் கூறப்படும் சொல் செருக்கினை உண்டாக்கும். அது பிறப்புக்கு வித்தாகும். ஆதலால் அதனை அறுத்தல் வேண்டும். அம்மையும் அப்பனும் நம்போன்ற உயிரினங்களே. நமக்கும் அவர்கட்கும் அனைத்துயிர்க்கும் நிலைபெற்ற உயிர்த்தொடர்பாம் அம்மையும் அப்பரும் அங்கு உளர். அவ்விருவரும் உன்னித்து (தியானித்து)த் தொழும் ஊழித் தலைவராவர். ஆருயிரின்கண் மருவிப் புகழ்ந்து சொல்லப்படும் புணர்ப்பாம் திருவடிப்பேறாய் நின்ற பெரும் பொருள் சிவபெருமானாகும். பின்: பின்னல் (முதனிலைத் தொழிற்பெயர்). எல்லார்க்கும் அம்மையப்பர் எண்குணஞ்சேர் முக்கண்ணர், நில்லா வுடலுறவு நீக்கு. (அ. சி.) உன் அம்மை - நினைதற்குரிய அம்மை. (5) 1106 .தார்மேல் உறைகின்ற தண்மலர் நான்முகன் பார்மேல் இருப்ப தொருநூறு தானுள பூமேல் உறைகின்ற போதகம் வந்தனள் நாமேல் உறைகின்ற நாயகி ஆணையே. (ப. இ.) உலகினைப் படைத்தற்பொருட்டுத் திருமாலின் குளிர்ந்த கொப்பூழ்த் தாமரையின்கண் தோன்றியவன் நான்முகன். அத் தாமரை நிலை ஆவிகளிடத்து மூலத்துக்குமேல் கூறப்படும். அதற்கு நூறு இதழ்கள் உண்டு. நெஞ்சத் தாமரைமேல் உறைகின்ற உணர்வுச் செல்வி எழுந்தருளினள். அவள் எழுந்தருள்வதும் தூய நாவின்கண் உறைகின்ற நாவரசியின் ஆணையேயாம். போதகம் - ஞானம்; உணர்வு. நாவரசி - வாகீசுவரி.
1. முன்னம். அப்பர், 6. 25 - 7. " அம்மையப்ப. திருக்களிற்றுப்படியார், 1. " அன்னை. பட்டினத்தடிகள், 10.
|